கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிக் கிளப்பை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. 

ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்குள் நடைபெறும் கால்பந்து தொடர்களில் ஒன்று கோபா டெல் ரே. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது.

இதில் பார்சிலோனா- அத்லெடிக் கிளப் அணிகள் மோதின. முதல் பாதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

2 ஆவது பாதி நேர ஆட்டத்தில் பார்சிலோனா வீரர்கள் அபாரமாக விளையாடினர். ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் கிரிஸ்மோன் முதல் கோலை பதிவு செய்தார். அடுத்த 3 நிமிடத்தில் டி ஜாங் ஒரு கோலும், மெஸ்சி 68 ஆவது மற்றும் 72 ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து கோலும் அடித்தனர். 

இதனால் பார்சிலோனா 4-0 என முன்னிலைப் பெற்றது.

13 நிமிடத்திற்குள் நான்கு கோல் அடித்து அத்லெடிக் கிளப்பிற்கு அதிர்ச்சி அளித்தனர். அதன்பின் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

கோபா டெல் ரே வரலாற்றில் 31 முறை வெற்றிகளைப் பெற்ற பார்சிலோனா மிகவும் வெற்றிகரமான அணியாகும்.

கடந்த 13 சீசன்களில் 2009, 2012, 2015, 2016, 2017, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அவர்கள் பட்டம் வென்றுள்ளனர்.

மேலும், அந்த சீசன்களில் மூன்று சந்தர்ப்பங்களில் அவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.