(எம்.மனோசித்ரா)

நாட்டின் பல பிரதேசங்களிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் துப்பாக்கிகளுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

களுத்துறை குற்ற விசாரணைப் பிரிவினரால் அளுத்கம பொலிஸ் பிரிவில் , தர்கா நகர் - பொந்துபிட்டி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 38 ரக ரிவோல்வர் மற்றும் 6 துப்பாக்கி ரவைகளுடன் 37 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபருக்கு எதிராக களுத்துறை மற்றும் மத்துகம நீதிமன்றங்களில் மனித கொலையுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அத்தோடு குறித்த சந்தேகநபர் அந்த வழக்குகளில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர் என்பதும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை அநுராதபுரம் குற்ற விசாரணைப் பிரிவினரால் திறப்பனை பிரதேசத்தில் 40 வயதுடைய சந்தேகநபரொருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதேபோன்று விசேட அதிரடிப்படையினரால் கேகாலை இம்புல்கஸ்தெனிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 28 வயதுடைய சந்தேகநபரொருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.