ஐதராபாத்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த மும்ப‍ை

Published By: Vishnu

18 Apr, 2021 | 10:06 AM
image

ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

14 ஆவது ஐ.பி.எல். டி-20 தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 9 ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொண்டது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஆரம்ப வீரர்களாக அணித் தலைவர் ரோகித் சர்மாவும் டிகொக்கும் களமிறகி, பவுண்டரியுடன் ஓட்ட கணக்கை தொடங்கினர். முஜீப் ரஹ்மான், புவனேஷ்வர்குமாரின் ஓவர்களில் சிக்ஸர்களை தெறிக்கவிட்ட ரோகித் சர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை உருவாக்கினார். 

இவர்கள் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ஓட்டங்களை திரட்டினர். எனினும் இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் விஜய் சங்கர் பிரித்தார். 

அதன்படி 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் துடுப்பெடுத்தாடிய ரோகித் சர்மா 6.3 ஆவது ஓவரில் விஜய் சங்கரின் பந்து வீச்சில் விராட் சிங்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவரையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவையும் 10 ஓட்டங்களுடன் வெளியேற்றினார் விஜய் சங்கர்.

அதன் பிறகு மும்பையின் ஓட்ட வேகம் வெகுவாக தளர்ந்தது. 

தொடர்ந்து டிகொக் 40 ஓட்டங்களுடனும், இஷான் கிஷன் 12 ஓட்டங்களுடனும், ஹர்த்திக் பாண்டியா 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கடினமான இந்த ஆடுகளத்தில் இறுதிக் கட்டத்தில் பொல்லார்ட் மாத்திரம் ஆறுதல் அளித்தார். 

சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரஹ்மானின் பந்துவீச்சில் விளாசிய ஒரு சிக்சர் 105 மீட்டர் தூரத்துக்கு பறந்தது. இந்த சீசனில் மெகா சிக்ஸர் இது தான். இதே போல் புவனேஷ்வர்குமாரின் ஓவரில் கடைசி இரு பந்தையும் சிக்ஸராக்கி 150 என்ற சவாலான ஓட்டத்தை அடைவதற்கு வழிவகுத்தார். 

20 ஓவர்கள் நிறைவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை பெற்றது.

பொல்லார்ட் 35 ஓட்டங்களுடனும் (22 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்), குருணல் பாண்டியா 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

151 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஐதராபாத்தின் தொடக்க வீரர்களாக அணித் தலைவர் டேவிட் வோர்னரும், ஜோ பெயர்ஸ்டோவும் களம் புகுந்தனர். 

பெயர்ஸ்டோ வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸரை பெற்று அதிரடி காட்டினார். அது மாத்திரமன்றி ஆடம் மில்னேவின் பந்து வீச்சில் 2 சிக்ஸரையும் தெறிக்க விட்டார். 

இதனால் பவர்-பிளேயில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 57 ஓட்டங்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

எனினும் எதிர்பாராதவிதமாக பேர்ஸ்டோ 43 ஓட்டங்களுடன் ஸ்டம்பை மிதித்து ‘ஹிட் விக்கெட்’ ஆகிப்போனார். அதேபோல் வோர்னர் 36 ஓட்டங்களுடன் அநாவசியமாக ரன்-அவுட் ஆக, ஆட்டத்தின் போக்கு மும்பை பக்கம் திரும்பியது. 

நடுத்தர வரிசையில் விஜய் சங்கர் மாத்திரம் 28 ஓட்டங்களை பெற ஏனைய வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியாக ஐதராபாத் அணி 19.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 13 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

மும்பை அணி சார்பில் பந்து வீச்சில் ட்ரென்ட் போல்ட் மற்றும் ராகுல் சஹார் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் குருணல் பாண்டியா தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

போட்டியின் ஆட்டநாயகனாக பொல்லார்ட் தெரிவானர்.

இந்த வெற்றி மும்பையின் இரண்டாவது வெற்றி என்பதுடன், ஐதராபாத் அணியின் மூன்றாவது தோல்வியும் ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35