(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சி குறிப்பிடுவதைப் போன்று கொழும்பு துறைமுக நகரத்திற்குள் பிரத்தியேக சட்டம் , பிரத்தியேக இராணுவம் என்றவாறாக செயற்பாடுகளை முன்னெடுக்க நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. எனினும் அவ்வாறானதொரு நிலைமை உருவாகும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூல சர்ச்சை தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

 பிறந்துள்ள தமிழ் - சிங்கள புத்தாண்டில் கடந்த காலத்தில் அரசாங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய பாதையில் பயணிக்க எதிர்பார்த்துள்ளோம். 

இந்த பயணத்தில் நாட்டை அபிவிருத்தியடைச் செய்வதே எமது பிரதான இலக்காகும். இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக உருவாக்குவதற்கான பொறுப்பு ஜனாதிபதி உள்ளிட்ட எம் அனைவரினதுமாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் நாட்டின் மேம்பாட்டிற்கான வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவது எமது இலக்காகும். 

கொவிட் தொற்றின் காரணமாக ஏற்பட்ட நெருக்கடிகள் மற்றும் மேற்குலக நாடுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் உள்ளிட்டவை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இவை அனைத்தையும் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து நாட்டுக்கு உரித்தான விடயங்களை செயற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகவுள்ளது. 

எமது பதவிகளை தக்க வைத்துக்கொள்வதும் , ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதும் தற்போது எமது எதிர்பார்ப்பல்ல. எனவே நாம் அனைவரும் எம்மிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து நாட்டின் முன்னேற்றத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

எதிர்க்கட்சி கூறுவதைப் போன்று துறைமுக நகரத்திற்குள் பிரத்தியேக சட்டம் , இராணுவம் என்று செயற்பட இடமளிக்க நாம் தயாராக இல்லை. 

அவ்வாறான நிலைமை உருவாகும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. இந்த சிக்கல் தொடர்பில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்பதே எமது நிலைப்பாடாகும். 

எவ்வாறிருப்பினும் எத்தகைய தீர்மானமாயினும் கட்சி ரீதியிலேயே அதனை நாம் முன்னெடுப்போம். அந்த தீர்மானம் நாட்டுக்கு சாதகமான தீர்மானமாக அமையுமே தவிர ஒருபோதும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்காது என்றார்.