(செய்திப்பிரிவு)

சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறித்து 50 பக்க ஆவணக்கோவையொன்று தயாரிக்கப்பட்டு, அந்த ஆவணம் பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2020 ஜூலை 6 ஆம் திகதி உருவாக்கப்பட்ட பிரிட்டனின் உலகளாவிய மனித உரிமைகள் தடை பொறிமுறையின் கீழ் இலங்கையின் தற்போதைய இராணுவத்தளபதி சவேந்திர சில்வா ஏன் கண்டனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற விடயங்கள் இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

'இலங்கையின் இறுதிக்கட்டப்போர் தொடர்பில் சர்வதேச வழக்கறிஞர்கள் மற்றும் சட்டவல்லுனர்கள் சேகரித்த ஆதாரங்களை உள்ளடக்கிய விரிவான களஞ்சியமொன்று உள்ளது. 

இந்த ஆவணத்தை உருவாக்குவதற்கு பிரிட்டனில் வாழும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மிகவும் முக்கியமானவையான அமைந்தன. 

அத்தோடு சவேந்திர சில்வா மற்றும் அவரது கட்டளைக்குக் கீழ் இருந்தவர்களுடனான இணைப்பை உருவாக்குவதற்கும் இவை உதவின' என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின் போது ஜெனரல் சவேந்திர சில்வா 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதியாகப் பணியாற்றினார். 

அதன்போது வாழ்வுரிமை மீறல் உள்ளடங்கலாக பல்வேறு மனித உரிமை மீறல்களில் அவரது பங்கு தொடர்பில் இந்த புதிய ஆவணத்தில் விபரிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு வலயங்கள் எனக்கூறப்பட்ட இடங்களில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் உணவுக்காக வரிசையில் நின்றவர்கள் மீதான எறிகணை, குண்டுத்தாக்குதல்களில் உயர்தப்பியவர்களின் நேரடி சாட்சிகள் மூலம் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பலர் தற்போது பிரிட்டனில் அகதிகளாக வாழ்ந்துவருகிறார்கள்.

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் 2020 ஆம் ஆண்டில் போரின் முடிவில் இடம்பெற்ற மீறல்களில் சவேந்திர சில்வாவின் வகிபாகத்திற்காக அவரைக் கடுமையாகக் கண்டனம் செய்தது. 

மீறல்களை முழுமையாக அங்கீகரித்தல் மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கல் என்பன மிகவும் முக்கியமானவையாகும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.