இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு இன்று வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் நடைபெறுகிறது.

வின்சர் கோட்டையில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. 

இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரிய இளவரசர் பிலிப் (வயது 99), கடந்த 9ஆம் திகதி வின்சர் கோட்டையில் காலமானார்.

மௌன அஞ்சலி மற்றும் படை வீரர்களின் வீர வணக்கத்துடன் ஊர்வலம் புறப்பட்டது. 

இளவரசர் பிலிப்பின் பாணியில் அவர் விரும்பிய வகையில் அவரது எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதிச்சடங்கு நடைபெறுகின்றன.

இளவரசர் பிலிப், தான் விரும்பியபடி மாற்றி வடிவமைத்த லேன்ட்ரோவர் காரில், அவரது உடல் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. 

இறுதி ஊர்வலத்தில் இளவரசர்கள் வில்லியம், ஹாரி மற்றும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ராணி எலிசபெத் ஊர்வலத்தில் வராமல், நேரடியாக தேவாலயத்திற்கு காரில் சென்றுள்ளார்.

இதேபோல் ஊர்வலத்தில் பங்கேற்காத அரச குடும்ப உறுப்பினர்களும் காரில் தேவாலயத்திற்கு சென்றனர்.

இறுதி ஊர்வலத்தில் இளவரசர் ஹரி பங்கேற்றார். ஆனால் அவரது மனைவி மேகன், கர்ப்பமாக இருப்பதால் பயணத்தை தவிர்க்கும்படிவைத்தியர் அறிவுறுத்தி உள்ளார். அதனால் அவர் கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் இருந்தபடியே இறுதிச்சடங்கு நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்க்கிறார்.

இதேபோல் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இறுதி நிகழ்வு காட்சிகளை தனது வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் பார்க்கிறார்.

இதையொட்டி நடைபெறவுள்ள இறுதி ஊர்வலத்தில் இளவரசர் பிலிப்பின் பிள்ளைகள் மற்றும் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். 

இளவரசரின் விருப்பப்படி, எந்த பிரசங்கமும் நடக்காது. இளவரசரின் இறுதிச் சடங்கில் 730 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஆனால் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படி புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் இறுதி அஞ்சலி செலுத்த 30 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளது.

இதற்கிடையே, இறுதி நிகழ்வில் முக்கியமான நேரமான பிற்பகல் 3 மணிக்கு, இளவரசரின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் வகையில், லண்டனின ஹீத்ரூ விமான நிலையத்தில் ஆறு நிமிடங்களுக்கு எந்த விமானமும் தரையிறங்கவோ பறக்கவோ செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.