(எம்.மனோசித்ரா)

நல்லாட்சி அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு முயற்சிகள் இடம்பெற்ற போது , அது சட்டத்திற்கு முரணான செயற்பாடு என தெரிவித்து அவரை சிறைவாசத்திலிருந்து பாதுகாத்தவர்  ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ ஆவார். 

அவ்வாறான நபருக்கு அச்சுறுத்தல் விடப்படுவது பொறுத்தமற்றது. இவ்வாறான பொறுத்தமற்ற நடத்தைகளை ஜனாதிபதி மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.  

செய்யும் தொழில் பற்றி அறியாவிட்டால் மறைந்த ராஜபக்ஷாக்களின் கௌரவத்திற்கு இழுக்கை ஏற்படுத்தாமல் , தயவு செய்து பதவியை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வலியுறுத்துவதாகவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

1994 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் சட்ட ஆலோசகராக ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ செயற்பட்டார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க வேட்புமனு தாக்கல் செய்யாமலிருந்த போது , இவரே போராடி வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போது , நல்லாட்சி அரசாங்கத்தில் நீதி அமைச்சராக செயற்பட்டு அதனை விஜேதாச ராஜபக்ஷவே தடுத்தார். ' இது சட்டத்துக்கு முரணான செயலாகும் , நான் நீதி அமைச்சராக இருக்கும் வரை இதற்கு இடமளிக்க மாட்டேன்.' என்று பகிரங்கமாகக் கூறினார்.

சிறைவாசத்திலிருந்து பாதுகாத்த நபருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அச்சுறுத்தல் விடுப்பது பொறுத்தமற்றது. ஜனாதிபதியொருவர் பேசக் கூடிய முறைமையிலிருந்து விலகி தரமற்ற வகையில் விஜேதாசவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

செய்யும் தொழில் பற்றி அறியாவிட்டால் மறைந்த ராஜபக்ஷாக்களின் கௌரவத்திற்கு இழுக்கை ஏற்படுத்தாமல் , தயவு செய்து பதவியை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு வலியுறுத்துகின்றேன். ஜனாதிபதி என்ற பதவியின் கௌரத்தை பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இராணுவத்திலும் நீங்கள் உயர் பதவி வகிக்கவில்லை. கேர்ணலாக மாத்திரமே செயற்பட்டீர்கள். ஒழுக்க விழுமியங்கள் , முக்கியத்துவம் , பொறுப்பு , அச்சமற்ற நிலை இன்றும் இராணுவத்திற்கு உள்ளது. ஜனாதிபதி பதவியும் தற்காலிகமானது என்பதை மறந்து விட வேண்டாம். மனிதாபிமானமே நிரந்தரமானது.

எனவே தயவு செய்து இவ்வாறான நடத்தைகளை மாற்றிக் கொள்ளுங்கள். ஒரு ஹிட்லரைப் போன்று செயற்படுங்கள் என்று கூறுகின்றனர். 

ஆனால் ஹிட்லருக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஹிட்லரைப் பற்றி வரலாற்றில் கூட எழுத முடியாது. ஹிட்லருக்கு என்ன ஆயிற்று என்பதை அவரும் அறியவில்லை , அவரைச் சார்ந்தோரும் அறியவில்லை. எனவே ஒரு மனிதனாக செயற்படுங்கள் என்றார்.