மாரடைப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று (17.04.2021) காலை 4.35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அவருக்கு வைத்தியசாலையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சனிக்கிழமை அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. 

அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விவேக் உடலை காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் விதிகள் நடைமுறையில் உள்ளதால், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது.