இலங்கையில் வனப்பகுதியை பாதுகாப்பதை இலக்காகக் கொண்டு , 'சுற்றுச் சூழலை பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் 20 இலட்சம் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தலைமையில் றாகம - தியகல சிறுவர் பூங்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழ் - சிங்கள புத்தாண்டு பிறப்பினைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை காலை 6.40 சுப நேரத்தில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைய , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் , அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கண்காணிப்பின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

'சுற்றுச்சூழலை பாதுகாப்போம்' வேலைத்திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்குள் 20 இலட்சம் மரக்கன்றுகளை நாட்டுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கமைய இவ்வாண்டுக்குள் 5 இலட்சம் மரக்கன்றுகளை நாட்ட எதிர்பார்க்கப்படுகிறது.

கம்பஹா மாவட்டத்தில் வனப்பகுதிகள் குறைவாகக் காணப்படுவதால் , அந்த மாவட்டத்தில் நிலப்பரப்புக்களை தேர்ந்தெடுத்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.