மொயீன் அலி மற்றும் டு பிளிஸ்சிஸ் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டம் கைகொடுக்க இலக்குவான இலக்கை அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வெற்றிகொண்டது.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திய ஐ.பி.எல். தொடரின்  8 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்எஸ் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 106 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

மயங்க் அகர்வால் (0), கேஎல் ராகுல் (5), கிறிஸ் கெய்ல் (10), நிக்கோலஸ் பூரன் (0), தீபக் ஹூடா (10) ஆகியோர் தீபக் சாஹர் ஓவரில் வீழ்ந்தனர். இதனால் பங்சாப் அணி 6.2 ஓவரில் 26 ஓட்டங்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 

தீபக் சாஹர் 4 ஓவரில் 13 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை சாய்த்து, பஞ்சாப் அணியின் துடுப்பாட்டத்தை சீர்குலைத்தார். அதில் இருந்து பஞ்சாப் அணியால் மீண்டு வரமுடியவில்லை. ஷாருக் கான் 36 பந்தில் 47 ஓட்டங்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 106 ஓட்டங்களை எடுத்தது.

பின்னர் 107 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிசிஸ் ஆரம்பத்தில் நிதானமாக ஆடினர்.

ருத்துராஜ் கெய்க்வாட் 5 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த மொயீன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சென்னை அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.

சென்னை அணியின் ஓட்ட எண்ணிக்கை 12.3 ஓவரில் 90 ஓட்டங்களாக இருக்கும்போது மொயீன் அலி 31 பந்தில் 46 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா 8 ஓட்டங்களுடனும் அம்பதி ராயுடு ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

டு பிளிஸ்சிஸ் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 107 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.