(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவை அச்சுறுத்துவதற்காக அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை. நாட்டின் ஜனாதிபதியொருவர் பாராளுமன்ற உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிவது சாதாரணமானதொரு விடயமாகும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் சமர்ப்பிக்கப்பட்ட போதும் விஜேதாச ராஜபக்ஷ இவ்வாறு தான் செயற்பட்டார். 

இறுதி நேரத்தில் நான் விளக்கமளித்ததன் பின்னரே அவர் 20 இற்கு ஆதரவாக வாக்களித்தார். எனவே இந்த விடயம் தொடர்பிலும் அவர் சரியான தகவல்களை அறிந்து கொள்ள முயற்சித்திருக்கலாம்.

அவருக்கு அமைச்சு பதவி கிடைத்திருக்க வேண்டும் என்பதை நாமும் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் தனக்கு அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதற்காக இல்லாதவொன்றை கூறுவது நியாயமற்றது. 

இந்நிலையில் இன்றைய தினம் பிரிதொரு ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து தொலைபேசியூடாக ஜனாதிபதி தன்னை அச்சுறுத்தியதாக விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பிள்ளைகள் இருவர் தொடர்பில் கருத்து வெளியிட்டமையால் தான் அவர் தன்னை அச்சுறுத்தியதாக விஜேதாச ராஜபக்ஷ கூறுகின்றார். 

அத்தோடு அவர் உங்களின் பிள்ளைகள் தொடர்பில் கூறவில்லை என்று ஜனாதிபதியிடம் கூறியதாகவும் தெரிவிக்கின்றார். இது ஒரு சாதாரண விடயமாகும்.

நான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவர்களுடன் பணியாற்றியிருக்கின்றேன். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆட்சி காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவர் எம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அது குறித்து கேட்டறிந்து கொள்வார். இதே போன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் இடம்பெற்றுள்ளது.

அதேபோன்று தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் விஜேதாச ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டு , வரலாற்றை நினைவுபடுத்தி நீங்கள் கூறிய விடயம் தவறு என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய ஜனாதிபதிக்கும் , விஜேதாச ராஜபக்ஷவுக்கும் இடையில் தெளிவுபடுத்தும் வகையிலான தொலைபேசி உரையாடலே இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பு தொடர்பில் இவ்வளவு பரவலாகப் பேசப்படுகிறது ? தற்போதைய ஜனாதிபதி தனக்கான வரப்பிரசாதங்களை மட்டுப்படுத்திக் கொண்டு சாதாரண இல்லத்திலேயே வசிக்கின்றார். இவ்வாறான சிறந்த விடயங்கள் தொடர்பில் பேசப்படுவதில்லை.

இதே வேளை நாம் முருத்தெட்டுவே ஆனந்த தேரரையும் சந்தித்து இது தொடர்பில் வினவினோம். இந்த ஊடக சந்திப்பு நேரலையாக ஒளிபரப்படுவதை தானும் அறிந்திருக்கவில்லை என்றும் , ஊடக சந்திப்பு நிறைவடைந்த பின்னர் நீங்கள் சற்று காரசாரமாக கருத்து வெளியிட்டீர்கள் என்று விஜயதாசவிடம் கூறியதாக முருத்தெட்டுவே ஆனந்த எம்மிடம் கூறினார். 

விஜயதாச ராஜபக்ஷ தனிப்பட்ட நிகழச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றார் என்பதை தான் அறிந்திருக்கவில்லை என்றும் தேரர் எம்மிடம் கூறினார்.

எனவே அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதற்காகவோ அல்லது வேறுதனிப்பட்ட விடயங்களுக்காகவோ நாட்டின் தேசிய பிரச்சினைகளை தொடர்புபடுத்தி கருத்து வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். அரசாங்கத்தினுள் இதனை பேசி தீர்த்துக் கொள்ள முயற்சிப்பது சிறந்ததாகும் என்றார்.