மாரடைப்பு காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ள நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்சினிமாவில் கொமடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும், கதையின் நாயகனாகவும் நடித்து வருபவர் நடிகர் விவேக். கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்ப்பதற்காக அண்மையில் இவர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். அனைவரும் கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென விழிப்புணர்வு காணொளியையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, விவேக்கின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். 

இந்நிலையில் அவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடு சீரற்றதாக இருந்ததை தொடர்ந்து, அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.