10 ரஷ்ய இராஜதந்திரிகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதாகவும், பல நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகவும் அமெரிக்க ஜானதிபதி ஜோ பைடன் நிர்வாகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

அத்துடன் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தலையிடுவதற்கும் கூட்டாட்சி அமைப்புகளை ஹேக்கிங் செய்வதற்கும் ரஷ்யா பொறுப்புக் கூற வேண்டும் என்றும் பைடன் நிர்வாகம் கூறியுள்ளது.

அமெரிக்க ஜனநாயகத்தின் மையப்பகுதியைக் குறைப்பதாகக் கூறும் செயல்களுக்காக ரஷ்யாவைத் தண்டிப்பதற்கும், மொஸ்கோ மீது பொருளாதார செலவுகளைத் திணிப்பதன் மூலம் அவர்களின் எதிர்காலச் செயல்களைத் தடுப்பதற்கும், நிதிக் கடன் வாங்குவதற்கான திறனை இலக்காகக் கொள்வதற்கும் இந்த கடுமையான தடைகள் வழிவகுக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

டஜன் கணக்கான ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைக்கும் இந்த நடவடிக்கைகள், "ரஷ்யாவின் தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு நடவடிக்கைகளை" தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பாரிய "சோலார் விண்ட்ஸ்" ஹேக்கின் பின்னால் ரஷ்ய உளவுத்துறை இருந்ததாகவும், 2020 தேர்தலில் மொஸ்கோ தலையிட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

எனினும் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த ரஷ்யா, இது குறித்து தாம் பதிலளிப்பதாகவும் கூறியது.

வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய பொருளாதாரத் தடைகள் ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவில் விரிவாக உள்ளன. 

இவற்றுள் நாட்டின் இணைய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் ஆறு ரஷ்ய நிறுவனங்கள் மீதான தடைகள், கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தலையிட முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 32 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான தடைகள் ஆகியவையும் இவற்றுள் அடங்களும்.

அத்துடன் வெளியேற்றப்பட்ட 10 இராஜதந்திரிகளில் ரஷ்ய உளவுத்துறையின் பிரதிநிதிகளும் அடங்குவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் இந்த பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவுடனான பதட்டங்களை அதிகரிப்பது உறுதி.