(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் உள்ள அனைத்து அதிவேக வீதிகள் ஊடாகவும் புத்தாண்டு தினமான கடந்த 14 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வார காலத்தில்  21 கோடி ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 

கடந்த 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரையிலான 7 நாட்களில் மட்டும் அதிவேக வீதிகள் ஊடாக 210.33 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றதாக  அதிவேக பாதைகள் மேற்பார்வை, ஒழுங்கமைப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பிலான பதில் பணிப்பாளர் நிஹால் லொட்விக் தெரிவித்தார்.

இந்த ஒரு வார காலத்தில், நாளொன்றுக்கான அதிக வருமானம் கடந்த 10 ஆம் திகதி பதிவானதாக அவர்  மேலும் கூறினார். 

கடந்த 10 ஆம் திகதி மட்டும் 4 கோடி ரூபாவை அண்மித்த வருமானம் கிடைக்கப் பெற்றதாகவும் 13 ஆம் திகதி 2 கோடி ரூபாவை அண்மித்த வருமானம் கிடைத்ததாகவும் அவர் மேலும் கூறினார். 

13 ஆம் திகதி கிடைக்கப் பெற்ற 2 கோடி ரூபாவை அண்மித்த வருமானமே குறித்த ஒரு வார காலப்பகுதியில் பதிவான குறைந்த வருமானமாகும். 

இந்த ஒரு வார காலத்தில் அதிக வருமானம் கிடைத்த கடந்த 10 ஆம் திகதி,  ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 187 வாகனங்கள்  அதிவேக வீதியூடாக பயணித்துள்ளதுடன்,  குறித்த வருமானமான 2 கோடி ரூபாவை அண்மித்த வருமானம் கிடைத்த 13 ஆம் திகதி 64 ஆயிரத்து 937 வாகங்கள் அதிவேக பாதைகளைப் பயன்படுத்தியுள்ளன.

சிங்கள, தமிழ் புத்தாண்டு ஆரம்பிக்க முன்னரான 8, 9, 10, 11 ஆம் திகதிகளில் மட்டும் அதி வேக வீதி ஊடாக் 14 கோடி ரூபா வரையிலான வருமானமும்,  அதனை தொடர்ந்து 12,13,14 ஆம் திகதிகளில் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமானமும் கிடைக்கப் பெற்றுள்ளன.