(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஐந்து தசாப்த கால சர்வதச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒவ்வொரு தசாப்தத்துக்குமான அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்களாக  ஐவரின் பெயர்களை உலக புகழ்பெற்ற விஸ்டன் சஞ்சிகை பெயரிட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த மூவரும், இலங்கையைச் சேர்ந்த ஒருவரும்  மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஒருவருமாக ஐந்து பேர் அடங்குகின்றனர்.

மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவானான விவியன் ரிச்சர்ட்ஸ் 1970 களின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெயரிடப்பட்டார்.   

இந்தியாவுக்கு முதன் முதலாக உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான கபில் தேவ் 1980 களின் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

1990 ஆம் ஆண்டுகளில் அதிசிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரராக டெஸ்ட், மற்றும் சர்வதேச ஒருநாள் அரங்கில் அதிக ஓட்டங்கள் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழும் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர்  பெயரிடப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும்  டெஸ்ட், மற்றும் சர்வதேச ஒருநாள் அரங்கில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக விளங்கும் முத்தையா முரளிதரன் 2000 ஆம் ஆண்டுகளின் அதி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக விஸ்டன் சஞ்சிகையினால் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோஹ்லி 2010 களின் அதிசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.