(எம்.ஆர்.எம்.வசீம்)

முஸ்லிம் அமைப்புக்களை தடைசெய்திருப்பது ஜனநாயக விரோத நடவடிக்கை என்பதுடன் சட்டமா அதிபரின் நடவடிக்கையும் பக்கச்சார்ப்பானதாகும். அவர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறே செயற்படுகின்றார் என கொழும் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

முஸ்லிகளின் வாக்குகளினாலே 20ஐ நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது - முஜிபுர் ரஹ்மான்  | Virakesari.lk

11 முஸ்லிம் அமைப்புக்களை நாட்டில் தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஏப்ரல் குண்டு தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக்கொண்டு 11முஸ்லிம் அமைப்புகளை அரசாங்கம் தடை செய்திருக்கின்றது.

ஆனால் இந்த அமைப்புகள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறு இருக்கும் நிலையில் முஸ்லிம் அமைப்புகளை அரசாங்கம் தடைசெய்திருப்பது ஜனநாயக விரோத செயலாகும். 

அத்துடன் ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விவாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் அடிப்படைவாத அமைப்புக்களை தடைசெய்யவேண்டும் என பொதுவாக தெரிவித்திருப்பதுடன் பொதுபல சேனாவை தடைசெய்யவேண்டும் என நேரடியாகவே குறிப்பிட்டிருக்கின்றது.

அப்படி இருக்கும்போது தாக்குதலுடன் எந்த சம்பந்தமும் இல்லாத முஸ்லிம் அமைப்புகளை மாத்திரம் தடைசெய்திருப்பது சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். பொதுபல சேனா அரசாங்கத்துக்கு தேவையான அமைப்பு. அரசாங்கத்துக்கு உதவி வருகின்ற அமைப்பு என்றபடியாலே அதனை தடைசெய்யவில்லை.

மேலும் முஸ்லிம் அமைப்புகளை மாத்திரம் பெயரிட்டு அதனை தடைசெய்யவேண்டும் என சட்டமா அதிபரின் பரிந்துரையானது பக்கச்சார்பான நடவடிக்கையாகும்.

சட்டா அதிபர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவகையில் செயற்படுகின்றார் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. அதனால் எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் தடைசெய்யப்பட்டிருக்கும் அமைப்புகள் நீதிமன்றம் சென்று தங்ளது உரிமையை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

அத்துடன் அரசாங்கம் தடைசெய்திருக்கும் அதிகமான அமைப்புக்கள் நாட்டில் கடந்த காலங்களில் பல சமூக சேவவைகளை மேற்கொண்டுவந்திருக்கும் அமைப்புகளாகும். தடைசெய்யப்பட்டிருக்கும் அமைப்புகளில் சில அமைப்புகள் வெளிநாட்டு அமைப்புகளாகும்.

அவை தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனைய அமைப்பைச்சேர்ந்தவர்கள் கடந்த காலங்களில் பயங்கரவாத செயற்பாடுகளுடன் ஈடுபட்டிருந்தால், அதுதொடர்பில் விசாரணை நடத்தியே நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த அமைப்புகளுடன் அரசாங்கமும் கலந்துரையாடவேண்டும். மேலும் அமைப்புகளை தடைசெய்து பிரச்சினையை தீர்க்க முடியாது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் பிரச்சினை மேலும் பூதாகரமாகும் நிலைமையே ஏற்படும்.

அதனால் அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விராேத நடவடிக்கையை ஒருபோது ஏற்றுக்காெள்ள முடியாது. இதற்கு எதிராக நீதிமன்றம் சென்று எமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்றார்.