(எம்.எம்.சில்வெஸ்டர்)

பயிற்றுநர் குழாமில் இணைந்துகொள்ளுமாறு மூன்று நாடுகளிடமிருந்து எனக்கு கிடைத்த அழைப்புக்களை நிராகரித்துள்ளேன். 

எனினும், இலங்கை கிரிக்கெட்டுக்கும்  இளம் வீரர்களுக்கும் நான் கற்றுக்கொண்டதை வழங்கத் திட்டமிட்டுள்ளேன் என திலகரட்ண டில்ஷான் தெரிவித்துள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னான் தலைவரான திலகரட்ண டில்ஷான் அங்குள்ள உள்ளூர் கிரிக்கெட் கழகம் சார்பாக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்நிலையில், பயிற்றுநர் குழாமுக்கு இணைந்துகொள்ளுமாறு தனக்கு கிடைத்த அழைப்புக்களை நிராகரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“எதிர்வரும் ஒக்டோபர் மாத காலத்தில் அவுஸ்திரேலியாவிலுள்ள கழக அணியொன்றுக்காக முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஒப்பந்தமாகியுள்ளேன். 

ஆகவே, பயிற்றுநர் குழாமில் இணைந்துகொள்ளுமாறு மூன்று நாடுகளிலிருந்து கிடைத்த அழைப்பை நான் நிராகரித்தேன். 

எனினும், எனது தாய்நாட்டுக்கு எதுவேண்டுமானாலும் செய்யத் தயாராகவுள்ளேன். 20 வருட காலமாக நான் கற்றுக்கொண்டதை இலங்கை கிரிக்கெட்டுக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் வழங்குவதற்கு தயங்க மாட்டேன். ஏனெனில், அதுவே எனது திட்டமாகும்”  என்றார்.