தமிழ் சினிமாவின் 'டிஜிஃற்றல் விசு' என போற்றப்படும் இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடிப்பில் தயாராகி இருக்கும் 'ரைட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' ஆகிய படங்களை தயாரித்த இயக்குனர் பா. ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'ரைட்டர்'. அறிமுக இயக்குனர்கள் பிராங்கிளின் , ஜேக்கப் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். கார்த்திக் கலை ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு '96' பட புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கிறார். சமுத்திரக்கனி கதையின் நாயகனாகவும், காவல் நிலையத்தில் பணியாற்றும் எழுத்தர் வேடத்தில் நடித்திருப்பதால் அவருடைய கதாபாத்திர தோற்றத்தை ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிட்டிருக்கிறார்கள்.

குற்ற சம்பவத்தின் போக்கை நிர்ணயிப்பதிலும், வழக்கை புனைவதிலும் காவல் நிலையத்தில் பணியாற்றும் எழுத்தாளர்களின் பங்களிப்பு குறித்து பேசும் இப்படத்தில் சமுத்திரக்கனி நடிப்பு அவரது ஃபர்ஸ்ட் லுக்கிலேயே தெரிவதால் அவரது ரசிகர்களும், பா. ரஞ்சித்தின் ரசிகர்களும் இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.