தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனரான ஏ. ஆர். முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு '1947' என பெயரிடப்பட்டிருக்கிறது.

'தீனா', 'கஜினி', 'துப்பாக்கி' என பல வெற்றி படங்களை அளித்து, தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ். திரைப்படங்களை இயக்குவதுடன் தன்னிடம் பணியாற்றிய உதவியாளர்களை இயக்குனர்களாக அறிமுகப்படுத்துவதற்காக சொந்தமாக பட நிறுவனம் தொடங்கி, வாய்ப்புகளை வழங்கி வருபவர். அந்த வகையில் 'வத்திக்குச்சி', 'ரங்கூன்', 'எங்கேயும் எப்போதும்', 'மான் கராத்தே', 'பத்து எண்றதுக்குள்ள', 'ராஜா ராணி' என பல படங்களை தயாரித்திருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். 

இவரது தயாரிப்பில் புதிதாக தயாராக இருக்கும் திரைப்படத்திற்கு '1947' என பெயரிடப்பட்டிருக்கிறது. '1947'  படத்தை தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் ஒரே தருணத்தில் தயாரிக்கிறார். இதற்காக பொலிவுட் தயாரிப்பாளர் ஓம்பிரகாஷ் பட் என்பவருடன் இணைந்திருக்கிறார். இந்தப் படத்தை ஏ. ஆர். முருகதாஸின் உதவியாளரான பொன் குமரன் இயக்குகிறார். '1947' ஆம் படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் தற்போது பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகிவரும் அனிமேஷன் படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.