கமல்ஹாசனின் 'நாயகன்', ரஜினிகாந்தின் 'பொல்லாதவன்' உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த முக்தா பிலிம்ஸ் சார்பில் முக்தா ரவி தயாரிக்கும் திரைப்படம் 'ஸ்ரீ வேதாந்த தேசிகர்'. இந்தத் திரைப்படம் முக்தா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் டிஜிற்றல் தளத்தில் வெளியாகவிருக்கிறது.

'கோடை மழை', 'சின்ன சின்ன ஆசைகள்', 'எதிர்காற்று', 'கண்களின் வார்த்தைகள்', 'பத்தாயிரம் கோடி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் முக்தா எஸ். சுந்தர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைபடம் 'ஸ்ரீ வேதாந்த தேசிகர்'. இதில் ஆன்மீக சொற்பொழிவாளரும், ஸ்ரீ வேதாந்த தேசிகர் பற்றி ஆய்வு செய்பவருமான துஷ்யந்த் ஸ்ரீதர் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ஸ்ருதி பிரியா, மூத்த நடிகர்கள் வை.ஜி. மகேந்திரன், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு மகாகவி பாரதியாரின் பேரனும், இசைக் கலைஞருமான ராஜ்குமார் பாரதி இசை அமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில், ' பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஸ்ரீ வேதாந்த தேசிகர். தமிழ், சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளை கற்றறிந்த இவர், வைஷ்ணவ முறைப்படி பெருமாளை வணங்குவது குறித்த ஆகம நியமங்களை ஒருங்கிணைத்தவர். 

இவரது காலத்தில் ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்தை மாலிக்காபூர் படையெடுப்பு நடத்தி அழிக்க முற்பட்டபோது அக்கோயிலின் புனிதத்தை காத்தவர். இதனை மையப்படுத்தி இப்படம் தயாராகியிருக்கிறது. 

கதை நிகழும் காலகட்டம் 14ஆம் நூற்றாண்டு என்பதால் அதற்கேற்ற வகையில் அரங்கங்களை வடிவமைத்தும், இடங்களை தெரிவு செய்தும் படப்பிடிப்பை நடத்தினோம். படத்தின் பணிகள் கடந்த ஆண்டே நிறைவடைந்து இருந்தாலும் கொரோனா பெரும் தொற்று காரணமாக வெளியிடுவதில் தாமதமானது. 

தற்போது இப்படத்தின் பார்வையாளர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் இதனை பட மாளிகையில் வெளியிடாமல் எங்களது நிறுவனத்தின் சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் புதிய வடிவிலான https://mukthafilms.in  டிஜிற்றல் தளத்தில் வெளியிடுகிறோம். எங்களுடைய டிஜிற்றல் தளம் இல்லங்களுக்கு படமாளிகையில் ரசிகர்கள் பெறும் அனுபவத்தை அறிமுகப்படுத்துவது. அதாவது தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை வீட்டில் உள்ளவர்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த டிஜிற்றல் தளத்தின் செயல்பாடு ஏப்ரல் 18ஆம் திகதி முதல் தொடங்குகிறது. முதலில் எங்களது தயாரிப்பான 'ஸ்ரீ வேதாந்த தேசிகர்' படத்தை வெளியிடுகிறோம். ஒருமுறை பார்ப்பதற்கு இந்திய மதிப்பில் 80 ரூபாய் மற்றும் 120 ரூபாய் என்ற இரண்டு வகையானதான கட்டணங்களை நிர்ணயித்திருக்கிறோம். 

இதன் மூலம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல இடங்களை இடங்களில் வாழும் தமிழர்களும், இந்துக்களும் ஒரே தருணத்தில் இப்படத்தை பார்வையிட இயலும்.

இந்தப் படத்தில் கதை 14ஆம் நூற்றாண்டில் நிகழ்வதால் மிருதங்கம், புல்லாங்குழல், தவில், நாதஸ்வரம், வீணை ஆகிய ஐந்து இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்தி பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறோம். 

இத்தகைய சவாலான இசை பணியை ராஜ்குமார் பாரதி வெற்றிகரமாக செய்திருக்கிறார். புழக்கத்தில் இல்லாத சமணர்கள் மற்றும் பௌத்தர்கள் பயன்படுத்திய பாலி மொழி சொற்களும் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. சமஸ்கிருத ஸ்லோகங்கள், தமிழ் கீர்த்தனைகளும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. 

படம் தமிழில் உருவாக்கப்பட்டிருந்தாலும், பார்வையாளர்களின் வசதிக்காக ஆங்கிலத்திலும் சப்டைட்டிலை இடம்பெறச் செய்திருக்கிறோம். ஸ்ரீ வேதாந்த தேசிகரின் சுயசரிதையை திரைப்படமாக தயாரித்திருப்பதால், இப்படத்தில் இருந்து வரும் லாபத் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை ஏழை எளிய மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக செலவிட திட்டமிட்டிருக்கிறோம்' என்றார்.