நாடளாவிய ரீதியில் பிலவ வருடப்பிறப்பு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 

அந்தவகையில், வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் பல பகுதிகளிலும் தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பு கொண்டாடப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பாரியாருடன் புதுவருடப்பிறப்பை வரவேற்று கொண்டாட்டத்தை முன்னெடுத்தார்.

இலங்கை வாழ் மக்களுடன் இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மிரிஹானவில் உள்ள தனது இல்லத்தில் புத்தாண்டு சம்பிரதாயங்களை நிறைவேற்றினார்.

ஜனாதிபதியும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷவும் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பாரம்பரிய சம்பிரதாயங்களை நிறைவேற்றி புத்தாண்டு தினத்தை கொண்டாடினர்.

ஜனாதிபதியும் பாரியார் அயோமா ராஜபக்ஷவும் சுபநேரத்தில் தங்கள் வீட்டு வளாகத்தில் மரக்கன்றொன்றை நட்டினர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள், மருமக்கள் உள்ளிட்ட உறவினர்களுடன் புதுவருடப் பிறப்பை வரவேற்று கொண்டாடத்தில் ஈடுபட்டார்.

யாழ்ப்பாணம்

சித்திரை புத்தாண்டு தினமான இன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

திருகோணமலை

தமிழ்,  சிங்கள சித்திரைப் புத்தாண்டு சிறப்பு பூசை நிகழ்வுகள் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோயிலில் இன்று காலை (14) இடம் பெற்றது.

பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் பிரதம குரு வேதாகமமாமணி பிரம்ம ஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்கள் பக்தர்களுக்கு நல்லாசி வழங்கினார்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆயலத்தில் பிலவ வருஷ விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

மலர்ந்திருக்கின்ற “பிலவ” எனும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு -  களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆயலத்தில் விஷேட பூஜை வழிபாடும், உள் வீதி திருவிழாவும் புதன்கிழமை (14) காலை இடம்பெற்றது.

மூல மூர்த்தியாகிய சுயம்புலிங்கப் பிள்ளையாருக்கு பூஜைகள் நடைபெற்று பின்னர் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றன. தொடர்ந்து பிள்ளையார், முருகன் வள்ளி சமேதரராய், சிவன் பார்வதி சமேதராய் ஆலயத்தின் உள்வீதி வலம் வந்து உள்வீதி திருவிழா நடைபெற்றது.

இதன்போது பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுடிருந்தனர். இறுதியில் ஆலய வழிபாடுகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஆலய பிரதம குருவால் கைவிஷேடம் வழங்கப்பட்டது.  கிரியைகள் அனைத்தும் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சு.கு.வினாயகமூர்த்தி குருக்கள் தலைமையில் நடைபெற்றன.

மன்னார்

தமிழ் - சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில்  இன்று (14) புதன் கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று புதன் கிழமை காலை 7.45 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றது.

பிலவ வருட சிறப்பு பூஜையினை ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ கருணாநந்த குருக்கள் நடாத்தி வைத்தார். சுபவேளையில் விசேட அபிசேகம் நடாத்தப்பட்டடு தொடர்ந்து  விசேட பூஜைகள் நடைபெற்றன.

 மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களும் மருத்து நீர் தேய்த்து வழிபாடுகளை முன்னெடுத்தனர்.

தமிழ் - சிங்கள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டின் போது நாட்டில் நீண்ட சாந்தியும் சமாதானமும் நிலவவும் கொரோனா அச்சுறுத்தல் நீங்கவும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் போது பிலவ வருட புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களுக்கு கைவிசேடம் வழங்கப்பட்டதுடன் ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.கொரோனா தொற்று காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் கலந்து கொண்டதோடு,சுகாதார நடைமுறைகளுடன் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மலையகம்

 

பிறந்திருக்கும் பிலவ புத்தாண்டை மலையக மக்கள் சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து 14.04.2021 அன்று  கொண்டாடினார்கள்.

புத்தாண்டை முன்னிட்டு அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் குருக்கள் பாலசுப்பிரமணிய சர்மாக குருக்கள் தலைமையிலும், அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும், கொட்டகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலும், விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

அத்தோடு அட்டன் நீக்ரோதாரம விகாரையிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இன்று பிறந்த தமிழ், சிங்கள புத்தாண்டை மலையக பகுதிகளில் உள்ள மக்கள் கோவில்களுக்கு சென்று புதுவருடத்தை ஆரம்பித்தனா்.

 இதில் அதிகளவிலான பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்றபற்றி கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனா்.