(செ.தேன்மொழி)

வீதி விபத்துகளினால் இன்று காலை ஆறுமணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்துக்குள் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்போச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

வீதி விபத்துகள் காரணமாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்துக்குள் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதன்போது நேற்று இடம்பெற்ற விபத்தில் சிக்கிய ஆறு பேரும், இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துகளில் சிக்கி காயமடைந்திருந்த 5 பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மாத்திரம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் ஏப்ரல் மாதத்திலேயே அதிகளவான வாகன விபத்துக்கள் பதிவாகி வருகின்றன. 

இந்நிலையில் அதனை தவிர்ப்பதற்காக பொலிஸ் தலைமையகம் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அதற்கமைய இன்று காலை ஆறு மணி முதல் நாளை காலை ஆறு மணிவரையிலும் இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

இதன்போது வாகன சாரதிகள் அதிகவேகமாக பயணிப்பதை தவிர்த்துக் கொள்வதுடன், வாகனங்களின் அளவை விடவும் அதிகளவான பயணிகளை ஏற்றிச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் தொடர்பிலும் கண்காணிக்கப்படும். 

அதற்கமைய மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் அடையாளம் காணப்பட்டால் அவர்களை பொலிஸார் கைது செய்வதுடன், அவர்களுக்கு பொலிஸார் பிணை வழங்கமாட்டார்கள். இவர்கள் அனைவருமே நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவதுடன், அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.