(எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம் என சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் சாமர மத்தும களுகே தெரிவித்தார்.

சமுர்த்தி உதவி பெறும் குடும்பம் உட்பட 7 பிரிவினருக்கு அரசாங்கத்தினால் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 5ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு சமுர்த்தி உதவி பெறும் குடும்பத்தினருக்கு மாத்திரம் நேற்று முன்தினம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தோம். 

சமுர்த்தி உதவி பெறும் குடும்பத்தினருக்கு மேலதிகமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பம், முதியோர் கொடுப்பனவு பெறும் குடும்பம் உட்பட குறைந்த வருமானம் பெறும் 7 பிரிவினருக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

இருந்தபோதும் தற்போது நிதி விநியோகிக்கப்பட்டிருப்பது சமுர்த்தி உதவி பெறும் குடும்பத்தினருக்கு மாத்திரம் வழங்குவதற்காகும். அதன் பிரகாரம் சமுர்த்தி உதவி பெறும் குடும்பத்தினருக்கு குறித்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.

என்றாலும் குறைந்த வருமானம் பெறும் அனைத்து குடும்பத்தினருக்கும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக பிரசாரம் இடம்பெற்றதால் அதனை பெற்றுக்கொள்வதற்காக வந்த சமுர்த்தி உதவி பெறும் குடும்பம் அல்லாதவர்கள் சமுர்த்தி அதிகாரிகளுடன் முரண்பட்டுக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது என்றார்.