(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கிரிக்கெட் குழாத்தினருக்கு கொவிட் 19 தொற்று நோயை கட்டுப்படுத்தும்  ‘அஸ்ட்ராசெனிகா’ தடுப்பூசியை வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவன முகாமைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்தார்.

‘அஸ்ட்ராசெனிகா’ தடுப்பூசியானது 30 வயதுக்கு குறைந்தவர்களுக்கு வழங்குவது ஏற்புடையதல்ல என விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் குழாமில் அநேகமானோர் 30 வயதுக்கும் குறைவானவர்களே உள்ளனர் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் ‘அஸ்ட்ராசெனிகா’ தடுப்பூசி வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பேராசிரியர் அர்ஜுன டி சில்வா, தேவையற்ற அபாயங்களை கையாளத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் 30 வயதுக்குட்பட்ட எவருமே ‘அஸ்ட்ராசெனிகா’ தடுப்பூசியை பயன்படுத்தியதில்லை. பங்களாதேஷ் கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் கிரிக்கெட் வீரர்களுக்கு வேறு தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் குழாத்தினருக்கு இன்றைய தினம் கொவிட் 19 தொற்று நோயை கட்டுப்படுத்தும்  ‘அஸ்ட்ராசெனிகா’ தடுப்பூசி வழங்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.