(எம்.மனோசித்ரா)

அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையிலும் ஏனையோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலும் காரொன்றில் பயணித்த நபர்களுக்கு நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்று திங்கட்கிழமை குறித்த காரின் முதல் உரிமையாளரும் தற்போது காரை பயன்படுத்தும் உரிமையாளரின் மகன் குறித்த காருடன் நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

குறித்த காரை தற்போது பயன்படுத்தும் உரிமையாளர் உடல் நலக்குறைவினால் வருகை தர முடியாததால் அவருடைய மகன் காருடன் வருகை தந்துள்ளதோடு, சனிக்கிழமை  அதிவேக நெடுஞ்சாலையில் காரை செலுத்திய சாரதியும் வருகை தந்துள்ளதாகவும், இவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

சம்பவ தினத்தன்று காரில் பயணித்த ஏனைய இளைஞர்கள் நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவில் முன்னிலையாகவில்லை.

எவ்வாறிருப்பினும் அவர்கள் ஒவ்வொருவரும் பெயர் மற்றும் முகவரியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களனிகம பிரதேசத்தில் அமைந்துள்ள நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவின் அலுவலகத்தில் ஏனையோர் முன்னிலையாகியுள்ளனர். 

முன்னிலையாகாத இளைஞர்கள் தொடர்பில் நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவு தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை காலை வேளையில் கடவத்தையில் வாகனத்தை செலுத்தி காலி வரை பயணித்து , மீண்டும் கடவத்தையிலிருந்து வெளியேறி கண்டிக்குச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  இதே வேளை சொந்த வாகனமொன்றை பிரிதொருவருக்கு விற்கும் போது எம்.டி.ஏ. 6 எனப்படும் படிவத்தை நிரப்பு போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்திடம் அறிவித்து முறைப்படி அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். .

இந்த குறித்த கார் உரிமையாளரால் இந்த முறைமைகள் எவையும் பின்பற்றப்படவில்லை. குறித்த நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

சனிக்கிழமை அதிவேக நெடுஞ்சாலையில் பாதகாப்பற்ற முறையில் சிலர் வாகனத்தில் பயணிக்கும் வகையிலான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. பாதுகாப்பற்ற முறையில் பயணித்தோடு மாத்திரமின்றி வீதியில் பயணித்த ஏனையோருக்கும் இடையூரை எற்படத்தம் வகையில் இவர்கள் செயற்பட்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இது தொடர்பில் அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய குறித்த கார் உரிமையாளர் பேராதனை பிரதேசத்தை சேர்ந்த நபர் என்பது தெரியவந்துள்ளது. இவர் 2015 மார்ச் 13 ஆம் திகதி இந்த காரை பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள விலாசத்தில் சென்று விசாரணைகளை முன்னெடுத்த போது , குறித்த கார் உரிமையாளரினால் உடவெளிகெட்டிய - அக்குரனை பிரதேசத்திலுள்ள நபரொருவருக்கு கார் விற்க்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவ்வாறு உரிமையாளரிடமிருந்து காரை கொள்வனவு செய்த நபர் கண்டி - அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவினரால் அலவத்துகொட பொலிஸ் நிலையத்திற்கு குறித்த நபர் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து உடனடியாக அவரை அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று குறித்த காரில் பயணித்த ஏனைய நபர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமையவே நேற்று திங்கட்கிழமை குறித்த நபர்கள் நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவில் முன்னிலையாகியுள்ளனர்.

சாரதியினால் பாதுகாப்பற்ற முறையில் கார் செலுத்தப்பட்டமை பிரதான குற்றமாகும். அத்தோடு அதில் பயணித்த ஏனைய நபர்கள் போக்குவரத்து சட்டங்களுக்கு முரணாக பிரதான வீதியில் அசௌகரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவினரால்  தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு இ இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதே வேளை குறித்த கார் உரிமையாளர் மோட்டார் வாகன சட்டங்களுக்கு புறம்பாகவே அவரது காரை பிரிதொரு நபருக்கு விற்பனை செய்துள்ளமையும் விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது. இது தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எந்தவொரு நபரும் தமது சொந்த வாகனங்களை பிரிதொருவருக்கு விற்பனை செய்யும் போது மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு அமைய அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும். எனவே காரின் முதல் உரிமையாளர் ஏதேனும் தவறிழைத்திருந்தால் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.