ஜப்பானும் இந்தோனேசியாவும் இராணுவ உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஒப்பத்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. 

இந்த ஒப்பந்தமானது ஜப்பானிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை ஜகார்த்தாவுடன் பரிமாற்றுவதற்கான அனுமதிகளை அளிக்கின்றது.

கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கு மற்றும் பிராந்திய உரிமைகோரல்கள் பற்றிய கவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களிடையே ‘பிளஸ் டு’ பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இதன்போதே இந்த ஒப்பந்தத்திற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.

 

முன்னதாக இந்த ‘பிளஸ் டு’ பாதுகாப்பு பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தின் போது, “கிழக்கு தென் சீனக் கடல் வளாகத்தில்  சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் செழிப்புக்கான நோக்கத்தினை முன்னெடுப்பது கடினமானது” என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி குறிப்பிட்டார்.

ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நோபூ கிஷி ஆகியோரும் மற்றும் இந்தோனேசியாவின் வெளிவிவகார அமைச்சர் ரெட்னோ மார்சுடி, பாதுகாப்பு அமைச்சர் பிரபோவோ சுபியான்டோ ஆகியோரும் “கிழக்கு, தென் சீனக் கடலில் இராணுவப் பயிற்சிகளில் தீவிரமாக பங்கேற்கவும் தென் சீனக் கடலில் தொலைதூர தீவுகளை கூட்டாக உருவாக்கவும், பாதுகாக்கவும்” இணங்கினார்கள்.

 

அத்துடன், “அப்பகுதியில் காணப்படும் நிலைமையை மாற்றுவதற்கான முயற்சியைத் தொடர்வது குறித்து மிகுந்த அக்கறையைப் பகிர்ந்து கொண்டனர்”.

மேலும் அடிப்படைக் கடல் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குகளைக் கடைப்பிடிக்கப்படுவதன் முக்கியத்துவதையும் கடல்சார் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் இரு நாட்டு அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டதாக ஜனப்பானிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

“நாங்கள் ஒன்றிணைந்து சுதந்திர மற்றும் வெளிப்படைத்தன்மையான கடல் ஒழுங்கை பராமரித்து உறவுகளை பலப்படுத்துவோம்”  என்று ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் நோபூ கிஷி பேச்சுவார்த்தைக்கு பின்னர் நடைபெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். 

அத்துடன், இந்தோனேசியாவிற்கு ஜப்பானிய பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்வது போன்ற விபரங்கள் குறித்து இரு நாடுகளும் முடிவொன்றை விரைவுபடுத்தி எடுக்கவுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார். 

ஜப்பானும் அதன் முக்கிய நட்பு நாடான அமெரிக்காவும் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்தோனேசியாவுடன் இந்தப் பாதுகாப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

அத்துடன், அமெரிக்க, ஜப்பானிய பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஆசியாவில் உள்ள நாடுகளுக்கு எதிரான சீன 'வற்புறுத்தலையும் ஆக்கிரமிப்பையும் கண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

ஜப்பானிய மற்றும் இந்தோனேசிய அமைச்சர்கள், மியான்மார் இராணுவத்தால் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்கள் கொலை செய்யப்பட்டமை குறித்து 'தீவிர அக்கறைகளை” பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர்.

அத்துடன் அந்த நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் மிகநெருக்கமாக ஒத்துழைப்புடன் செயற்படவும் இணக்கம் வெளியிட்டனர். 

-அசோசியட்டட் பிரஸுக்காக மரி யமபகுச்சி-