(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஏப்ரல் 19 ஆம் திகதியன்று பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கபட்டதும் எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாத பாடசாலை விடுமுறைக் காலங்களில் மாற்றங்கள் ஏற்படும் என கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.

இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த க.பொ.த. உயர் தர பரீட்சை மற்றும் 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை என்பன எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதனால், ஆகஸ்ட் மாத பாடசாலை விடுமுறையை ஒக்டோபர் மாதத்தில் வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருகிறது.

மேலும், க.பொ.த. சாதாரணத் தர பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நடத்த உத்தேசித்துள்ளதால், டிசம்பர் மாதத்துக்கான விடுமுறையை ஜனவரி மாதம் வழங்குவது குறித்து கல்வி  அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

ஆகவே, ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு க.பொ.த. உயர் தரம், 5 ஆம் தர புலமை பரீட்சை, க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் நடத்தப்படும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சசின் உயர்மட்ட குழு கலந்தாலோசித்து வருகிறது.

5 ஆம் தர புலமைப் பரீட்சை ஒக்டோபர் 3 ஆம் திகதியன்றும், க.பொ.த உயர் தரப்பரீட்சை ஒக்டோபர் 4  ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையிலும், க.பொ.த. சாதாரணத் தர பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி மாத கடைசி வாரத்தில் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.