(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்த கழங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தபட்ட கிரிக்கெட் தொடரில் எஞ்சலோ பெரேரா தலைமையிலான நொன்டஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (என்.சீ.சீ.) ஒரு போட்டியிலேனும் தோல்வியைத் தழுவாது சம்பியன் பட்டத்தை வென்றது.

கொழும்பு எஸ்.எஸ்.சீ. கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் (11) நடைபெற்ற இறுதிப் போட்யில்  ராகம கிரிக்கெட் கழகத்தை எதிர்த்தாடிய என்.சீ.சீ. அணி 145 ஓட்டங்களால் வெற்றியீட்டியிருந்தது.

இப்போட்டித் தொடரில் ஏ மற்றும் குழுக்களில் தலா 7 கழங்களும், பீ மற்றும் சீ குழுக்களில் தலா 6 கழகங்களும் அடங்கலாக நாட்டின் 26 முன்னனி கழகங்கள் பங்கேற்றன. 

இதில் தத்தம் குழுக்களில் முதலிரண்டு இடங்களை பெற்ற அணிகள் கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றதுடன், அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றியீட்டி கழகங்கள் அடுத்தடுத்த  போட்டிகளுக்கு  நேரடியாகத் தகுதி பெற்றன.

இதன்படி இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு எஞ்சலோ பெரேரா தலைமையிலான என்.சீ.சீ.யும் இஷான் ஜயரத்ன தலைமையிலான ராகம கிரிக்கெட் கழகமும் தகுதி பெற்றன.

முதலில் துடுப்பெடுத்தாடிய என்.சீ.சீ. அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

துடுப்பாட்டத்தில் அணி சார்பில் வளர்ந்துவரும் இளம் வீரரான கமில் மிஷார 9 பெளண்டரிகளுடன் 113 ஓட்டங்களை குவித்தார். 

இவரைத்தவிர மற்றுமொரு இளம் வீரரான கவீன் பண்டார 65 ஓட்டங்களையும், அணித்தலைவரான எஞ்சலோ பெரேரா 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இஷான் ஜயரத்ன, பினுர பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ராகம கிரிக்கெட் கழகம் 30.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும்இழந்து 141 ஓட்டங்களை மாத்திமே பெற்று 145 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. 

அவ்வணி சார்பில் ஜனித் லியனகே 42 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ண 4 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இப்போட்டித் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக பினுர பெர்னாண்டோ தெரிவானதுடன் (ராகம) , சிறந்த துடுப்பாட்ட வீரராக சரித் அசலங்க (எஸ்.எஸ்.சீ) தெரிவானார். போட்டித் தொடரின் நாயகனாக ராகம கிரிக்கெட் கழகத்தின் ஜனித் லியனகே வென்றெடுத்தார்.

இறுதிப் போட்டியில் சதம் விளாசி என்.சீ.சீ. அணியின் வெற்றியில் பெரும் பங்காற்றி கமில் மிஷார இறுதிப் போட்டியின் நாயகனாகத் தெரிவானார்.

இதேவேளை மகளிருக்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டித் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக இலங்கை கடற்படை கழத்தின் இனோக்கா ரணவீர தெரிவானதுடன், சிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக இலங்கை கிரிக்கெட் அணித்தலைவியும் சிலாஹ் மேரியன்ஸ் கழத்தின் சமரி அத்தபத்து தெரிவானார். தொடரின் சிறந்த வீராங்கனையாக இலங்கை இராணுவ கழகத்தின் நிலக்சி சில்வா தெரிவானார்.