இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இன்று பிற்பகல் இலங்கையை வந்தடையவுள்ளது.

சுமார் 40 உறுப்பினர்களை கொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் குழாமினர் சிறப்பு விமானத்தின் மூலமாக இன்று பிற்பகல் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமானத்தை வந்தடைவார்கள்.

விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்தவுடன் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பில் உள்ள ஒரு ஹொட்டலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனிமைப்படுத்தல் காலத்தில் பங்களாதேஷ் அணியினருக்கு பாதுகாப்பு வழங்குமாறு இராணுவத்திடம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மூன்று நாள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு, நீர்கொழும்பு மரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் அவர்கள் பயிற்சி நடவடிக்கையினை மேற்கொள்வார்கள்.

அதன் பின்னர் ஏப்ரல் 21 பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகும் முதல் டெஸ்ட் போட்டியினை கருத்திற் கொண்டு, ஏப்ரல் 19 அன்று கண்டிக்கு புறப்படுவார்கள்.