விசேட பொது விடுமுறை என்று அரசாங்கம் அறிவித்த போதிலும் கொழும்பு பங்குச் சந்தை இன்று வழமைபோல் செயற்படும்.

விடுமுறை அறிவிப்பால் கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தகம் பாதிக்கப்படாது என்று அதன் தல‍ைமை நிர்வாக அதிகாரி ரஜீவ் பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகன போக்குவரத்து

இன்று விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிக்கையில் , தற்போதுள்ள நடைமுறைகளின் அடிப்படையில் 0112 677 877 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ஏற்கனவே முற்பதிவினை மேற்கொண்டவர்கள், நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்களின் மூலம் திணைக்களத்தின் சேவைகளை பெற முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக மாவட்ட அலுவலங்களில் முற்பதிவு செய்தவர்கள், குருணாகல், கம்பஹா, அநுராதபுரம், யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை ஆகிய மாவட்ட அலுவலகங்களிலும் நாளைய தினம் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் திணைக்களம் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வங்கிகள்

இன்றைய தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அரச விசேடவிடுமுறை, அரச மற்றும் தனியார் வங்கிகளுக்குப் பொருந்தாது என அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினால் அரச மற்றும் தனியார் வங்கிகள் திறக்கப்பட்டிருக்கும்.