சிவலிங்கம் சிவகுமாரன்

தொழிலாளர்களின் நாட்சம்பள விவகாரம் பற்றிய வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை.எனினும் ஆயிரம் ரூபாய் வர்த்தமானியை இரத்து செய்ய அல்லது தடை விதிக்கக் கோரும் கம்பனிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது என்றே தொழிற்சங்கங்கள் அறிக்கை விடுத்து வருகின்றன. 

கம்பனிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையை ஆரம்ப கட்ட வெற்றியாக நாம் கொள்ளலாம். ஏனெனில் இந்த கோரிக்கை ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டுள்ளதால்  வர்த்தமானி அறிவித்தலை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் கம்பனிகள் உள்ளன.   அவை சகல தோட்ட நிர்வாகங்களுக்கும் அடிப்படை சம்பளமாக 900 ரூபாயையும் வரவு செலவு திட்ட நிவாரணமாக 100 ரூபாயையும் வழங்குமாறு கடிதம் அனுப்பியுள்ளன. அதே வேளை ஆயிரம் ரூபாய்க்கே ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதி ஆகியன கணக்கிடப்படல் வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

ஆகவே இந்த நிலைமை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்ற  நம்பிக்கை சற்று துளிர்த்துள்ளது. வழக்கு விசாரணை அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வழக்கின்  தீர்ப்பு எப்போது வரும் என்று இப்போதைக்கு கூற முடியாது.

 காரணம் தீர்ப்பு வந்த பிறகும் கூட கம்பனிகள் உயர்நீதிமன்றில் முறையீடு செய்யலாம். வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தலாம். ஆனால் சட்டங்களை உட்டபடுத்த முடியாது. ஆகையால் தான் நாம் ஆரம்பத்திலிருந்தே இந்த விடயத்தை பாராளுமன்றில் சட்டமாக்குவதற்கு ஏன் அரசாங்கம் தயங்குகிறது என்ற கேள்வியை முன்வைத்து வருகின்றோம்.

தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் காத்திருக்கும் சவால்கள்

 சம்பள நிர்ணய சபையின் மூலம் தொழிலாளர்களின் வேதனம் தீர்மானிக்கப்படுமாயின் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகிறோம் என கம்பனிகள் கூறியதன் பின்னணியிலுள்ள அபாயத்தை அப்போது எவரும் உணர்ந்திருக்கவில்லை. இப்போது அது நடைமுறைக்கு வரும் போது சில ஆபத்துக்கள் அச்சுறுத்துகின்றன. 

தொழிலாளர் சம்பள விடயத்தில் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறைகள் இல்லை என்பதை இது உணர்த்தி நிற்கின்றது. கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களையும் தொழிலாளர்களையும் திருப்தியுறச் செய்வதற்காகவும் இந்த விவகாரத்தை இழுத்தடிக்கவுமே சகல தரப்பிலிருந்தும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. விஞ்ஞான அல்லது அறிவியல் ரீதியான அணுமுறைகள் ஆய்வுகள் என்றால் எது சரி எது பிழை என்பதை அறிந்து அதற்கேற்றவாறு விடயங்களை முன்னெடுக்கலாம். ஆயிரம் ரூபாய் நாட்சம்பளம் வழங்க வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட அரசாங்கத்துக்குஇ அதற்கெதிராக கம்பனிகள் நீதிமன்றம் செல்லும் என்ற  விடயம் தெரியாமலில்லை. 

அப்படி சென்றால் வழக்கு வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படும் என்ற விடயமும் சிரேஷ்ட சட்டத்தரணியான தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு தெரியாமலில்லை. அப்படி இருக்கும் போது இதை ஏன் அரசாங்கம் விஞ்ஞானபூர்வமாக அணுகவில்லை என்ற கேள்வி எழுகின்றது.  மறுபக்கம் இந்த விடயத்தை ஒன்றிணைந்து அணுகாமல் தனித்தனியே நின்று தொழிலாளர்கள் மத்தியில் பெயர்களைப் போட்டுக்கொள்ள அடித்துக்கொள்கின்றன கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள். ஒரு பக்கம் இ.தொ.கா அறிக்கை விட்டால் மறுபக்கம் தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் அறிக்கை விடுகின்றார்.

மற்றுமொரு தரப்பான தொழிற்சங்க கூட்டமைப்பினரிடமிருந்து எந்த சத்தத்தையும் காணவில்லை. கூட்டு ஒப்பந்த பேச்சு வார்த்தைகளில் ஒன்றாக அமர்ந்து பேசி தொழிலாளர் சம்பளத்தை தீர்மானிக்கும் இந்த தரப்பினர் தற்போது சம்பள நிர்ணய சபைக்கு  விவகாரம் சென்றவுடன் வெளியிலிருந்து அறிக்கை போர் செய்து கொண்டிருக்கின்றனர்.  ஆனால் இந்த விவகாரத்தை பொறுமையோடு அவதானித்துக்கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு இதுவரையிலும் எவரும் நன்றி கூறவில்லை.

மேலதிக சலுகைகளை இழந்துள்ள தொழிலாளர்கள்

கூட்டு ஒப்பந்தம் இல்லாத காரணத்தினால் அதிலுள்ளஇ தொழிலாளர் மேலதிக சலுகைகள் இல்லாமலாக்கப்பட்டுள்ளன. இரண்டு சட்டங்களுக்குட்பட்டு எம்மால் வேதனைம் வழங்க முடியாது என கம்பனிகள் கூறியதற்கு இதுவே பிரதான காரணம். தற்போது கழிவுகள் விடுத்து பார்க்கும் போது நாள் ஒன்றுக்கு தொழிலாளி ஒருவருக்கு 900 ரூபாயே கிடைக்கும். அதே வேளை மேலதிகமாக பறிக்கப்படும் கொழுந்துக்கு தொழிலாளர்களுக்கு எந்தவித கொடுப்பனவுகளும் வழங்கப்பட போவதில்லை. கூட்டு ஒப்பந்தத்தின் படி நாள் ஒன்றுக்கு 18 கிலோ கொழுந்து பறிக்க வேண்டியிருந்தது. மேலதிகமாக பறிக்கப்படும் கொழுந்துக்கு கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் வீதம் தொழிலாளர்கள் பெற்று வந்தனர். அதன்படி கொழுந்து விளைச்சல் மிகுந்த காலகட்டங்களில் தொழிலாளி ஒருவர் நாள் ஒன்றுக்கு சர்வசாதாரணமாக 40 கிலோவுக்கு மேல் கொழுந்து பறித்து வந்தனர். மேலதிக கொழுந்தின் மூலமே அவர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஆயிரம் ரூபாயை மேலதிக வருமானமாக பெற்று வந்தனர். தற்போது அப்படியில்லை.

இவ்வாறான சலுகைகளையே கம்பனிகள் நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. அப்படியானால் கொழுந்து விளைச்சல் காலத்தில் மேலதிக கொழுந்து பறிக்கப்படாமல் அப்படியே விடப்படுமா அல்லது ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வரவழைத்து அந்த கொழுந்தை தோட்ட நிர்வாகங்கள் பறிக்குமா அல்லது ஆண் தொழிலாளர்களை வைத்து இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுமா போன்ற கேள்விகள் எழுகின்றன.

மேலதிக கொடுப்பனவுகள்இ சலுகைகள் இல்லாத இந்தமுறையினால் மாதத்துக்கு 25 நாட்கள் வேலை வழங்கப்பட்டாலும் கூட தொழிலாளி ஒருவருக்கு கிடைக்கும் மாதச்சம்பளம் 22இ500 ரூபாய் மட்டுமே. ஆகவே சம்பள நிர்ணய சபையின் மூலம் ஆயிரம் ரூபாய் நாட் சம்பளத்தைப் பெற தொழிற்சங்கங்கள் முடிவு செய்திருந்தாலும் அது சம்பளத்தை மட்டும் அதிகரிப்பதற்கான ஒரு பொறிமுறையே ஒழிய தொழிலாளர்களின் மேலதிக கொடுப்பனவுஇ சலுகைகள்இ சேமநலன்கள் தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தின் அவசியத்தை உணரவில்லை. இதையே நாம் விஞ்ஞானபூர்வ அணுகுமுறையை தொழிற்சங்கங்கள் கடைப்பிடிக்கவில்லை என்கிறோம்.   

 மேலதிக சலுகைகளை எவ்வாறு பெறுவது?

பெருந்தோட்டத்துறை என்பது ஒரு சிறிய தனியார் அமைப்பல்ல. அது ஒரு பாரிய நிறுவனம். ஆகவே அங்கு தொழில் புரியக்கூடிய சுமார் ஒன்றரை இலட்சம் தொழிலாளர்களுக்கு இதுநாள் வரை கிடைக்கப்பெற்று வந்த ஏனைய சலுகைகளை கொடுக்க முடியாது என கம்பனிகள் ஒரே நாளில் அடம்பிடிக்க முடியாது.  சம்பள நிர்ணயசபையின் மூலம் எவ்வாறு நாட் சம்பளம் ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொள்ளப்பட்டதோ அதே போன்று தொழில் அமைச்சர் இதொழில் ஆணையாளர் ஊடாக இகூட்டு ஒப்பந்தத்தில் அவர்களுக்குக் கிடைத்த மேற்கூறிய இதர கொடுப்பனவுகள் சலுகைகளை உறுதிப்படுத்த தொழிற்சங்கங்கள் முன்வர வேண்டிய காலம் இது.  தமது அறிக்கைகளுக்கு பயந்து கம்பனிகள் அவற்றை கொடுத்து விடும் என்று தொழிற்சங்கங்கள் அமைதி காக்க முடியாது. 

ஆயிரம் ரூபாய் நாட்சம்பளம் சட்டரீதியாக எவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டதோ அதே போன்று கூட்டு ஒப்பந்த தொழிலாளர் நலன்களை சட்டரீதியாக பெற்றுக்கொள்ளும் அணுகுமுறைகள் மிக முக்கியம். எனவே கம்பனிகளுடன் இது குறித்த  பேச்சுவார்த்தைகளுக்கு தொழிற்சங்கங்கள் செல்ல வேண்டும். அந்த பேச்சு வார்த்தையின் சமரசம் காணப்படாவிட்டால் இ அதற்கடுத்த சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்கு பல வழிகள் உள்ளன. அது குறித்து தொழிற்சங்கங்கள் ஆராய வேண்டும். முக்கியமாக இவ்வாறான பிணக்குகளை தீர்ப்பதற்கு கைத்தொழில் நீதிமன்றங்கள் உள்ளன. எனவே வர்த்தமானி அறிவித்தலை தக்க வைத்துக்கொண்டது மட்டுமல்ல தற்போதைய வெற்றி. அது சம்பள விடயத்தை பற்றி மாத்திரமே முடிவு செய்கிறது. மாறாக இத்தனை நாட்களாக தொழிலாளர்கள் பெற்று வந்த ஏனைய விடயங்களை எவ்வாறு தக்க வைத்துக்கொள்வது என்ற தீர்க்கதரிசன சிந்தனையே இப்போதைய தேவை. யார் சிந்திக்கப் போகின்றனர்?