ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஆர்ட்டிக்கிள் 15' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் உதயநிதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

'கனா' என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் தயாராகி வரும்  பெயரிடப்படாத படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதையின் நாயகனாக நடிக்கிறார். 'தல' அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்டபார்வை' மற்றும் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் 'தல' அஜீத் நடிப்பில் தயாராகி வரும் 'வலிமை' ஆகிய படங்களை தயாரித்த பொலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.

பொலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஆர்ட்டிகிள் 15'  படத்தின் தமிழ் ரீமேக்கான இதில் உதயநிதி ஸ்டாலின்  பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் எனவும், இந்த திரைப்படம் ஒரு கொலை வழக்கு தொடர்பான குற்ற விசாரணையின் போது இரண்டு பிரிவை சேர்ந்த உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையே நடைபெறும் ஈகோ மோதலை மற்றும் சாதிய மோதலை பின்னணியாக கொண்டது எனவும் பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இதன் காரணத்தினாலேயே இப்படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே நடிகர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர், இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பில் பங்கு பற்றி இருக்கிறார் என்பதும், அப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு இடையே கிடைத்த இடைவெளியில் இப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.