(செ.தேன்மொழி)

காரின் ஜன்னல் பகுதியில் அமர்ந்துக் கொண்டு தங்களது உடற்பகுதிகள் வெளியில் தெரியும் வகையில் காரில் பயணித்த நபர்களை அடையாளம் காணுவதற்காக விசேட விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

அதிவேக வீதியில் பயணித்துக் கொண்டிருக்கும் கார் ஒன்றில் , அதன் ஜன்னல் பகுதிகளில் அமர்ந்துக் கொண்டு அதன் பயணிகள் செல்லும் காணொளி பதிவொன்று சமூகவலைத்தலங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது இவர்களுக்கு மட்டுமன்றி வீதியில் செல்லும் ஏனையவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் , காரின் இலக்கத்தகடு தொடர்பில் மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஆராய்ந்து பார்த்தப் போது , அது கண்டி பகுதியைச் சேர்ந்த நபரொருவருக்கு சொந்தமான கார் என்று தெரியவந்துள்ளது.

காரின் உரிமையாளரால் அந்த கார் பயன்படுத்தப்பட்டு வந்ததா? அல்லது வேறு எவறுக்கேனும் கார் பொறுப்பளிக்கப்பட்டிருந்ததா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் , காரில் பயணித்த நபர்களை அடையாளம் காணுவதற்காகவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.