(செ.தேன்மொழி)

வத்தளை பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் 10 இலட்சத்துக்கும் அதிகமான பணத் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் நேற்று பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகபொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

வத்தளை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இவரிடமிருந்து 101 கிராம் ஹெரோயின் , 113 கிராம் ஐஸ் போதைப் பொருளும் , 10 இலட்சத்து 30 ஆயிரத்து 670 ரூபாய் பணத் தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரை வத்தளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் , அவரை ஏழு நாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கு அனுமதி பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, வெலிகந்த மற்றும் பொரளை ஆகிய பகுதிகளில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வத்தளை மற்றும் கோட்டை பகுதிகளைச் சேர்ந்த 26 , 42 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 4 கிராம் 740 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.