இந்தியாவில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது.

அதன்படி நேற்றைய தினம் 1.52 இலட்சத்திற்கும் அதிகளவான புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் 1.33 கோடியையும் (1,33,58,805) விஞ்சியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் மொத்தம் 1,52,879 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் இன்று கா‍லை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக செயலில் உள்ள கொரோனா நோயாளர்களில் எண்ணிக்கை சுமார் ஆறரை மாதங்களுக்கு பின்னர் 10 இலட்சத்தையும் கடந்துள்ளது.

அது மாத்திரமன்றி 839 இறப்புகளையும் இந்தியா நேற்று பதிவுசெய்துள்ளது. இது கடந்த ஒக்டோபருக்கு பின்னர் ஒரே நாளில் பதிவான அதிகபடியான உயிரிழப்பு ஆகும்.

இதனிடையே நேற்றைய தினம் 90,584 கொரோனா நோயாளர்கள் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டும் உள்ளனர்.

கொவிட்-19 க்கு எதிராக போராடி வரும் இந்தியாவில் இதுவரை 10,15,95,147 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.