(ஆர்.ராம்)

யாழ்.மாநகர மேயர் மணிவண்ணன் கைது உட்படரூபவ் ஆட்சியாளர்கள் அண்மைய நாட்களில் அரங்கேற்றும் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும் போது மியன்மாரைப் போன்ற நிலைமைகள் வெகுவிரைவில் இலங்கையில் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி தயான் ஜயத்திலக்க எச்சரித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில்,  வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் மற்றும் தென்னிலங்கை முற்போக்கு சக்திகள், ஆட்சியில் உள்ள அரசாங்கத்தினுள் காணப்படும் கொள்கை அளவில் இணங்கிச் செயற்படும் தரப்புக்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து பலமானதொரு சக்தியை உருவாக்க வேண்டும் என்றும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.

இந்தச் செயற்பாட்டில் தாதங்களைச் செய்யாது உடனடியாக பொதுத்தளமொன்றுக்கு அனைத்து சக்திகளும் வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய ஆட்சியாளர்களின் கையில் நாட்டின் நிருவாகம் சென்றதிலிருந்து ஜனநாயகம் நாளுக்கு நாள் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகின்றது. மியன்மாரில் ஒரே நாளில் நிகழ்ந்த இரணுவப்புரட்சியானது, இலங்கையில் படிப்படியாக, தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

அவ்விதமான நிலைமைகள் தற்போது வேகமெடுக்க ஆரம்பித்துள்ளன. அதற்கு சிறந்தவொரு உதாரணம் தான் யாழ்.மேயர் கைது செய்யப்பட்டதும் விடுவிக்கப்பட்டதுமாகும்.

மறுபக்கத்தில், புதிய அரசியமைப்பை விரைவாக கொண்டுவரவுள்ளதாக ஆட்சியாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆனால் அதிகரப்பகிர்வு தொடர்பில் வாய் திறக்கின்றார்கள் இல்லை.

ஆகக்குறைந்தது 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அவர்களின் நிலைப்பாட்டைக் கூட வெளிப்படுத்துகின்றார்கள் இல்லை. அதனைவிடவும் தமிழர்களுக்கு உள்ளுராட்சி மன்றத்திற்கான நிருவாக அதிகாரத்தினைக் கூட வழங்கக் கூடாது என்பதிலேயே ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள்.

இதனையும் யாழ்.மேயரின் கைது வெளிப்படுத்தாக உள்ளது. தற்போதைய சூழலில் 13 ஆவது திருத்தச்சட்டம் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் மூலம் அதிகாரப்பகிர்வின் அவசியமும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்திற்குள்ளேயும் 13ஆவது திருத்தச்சட்டத்தினை ஏற்றுக்கொண்ட சக்திகள் உள்ளன.

ஆகவே வடக்கு கிழக்கை பிரதிநிதித்தவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தென்னிலங்கை முற்போக்கு தரப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும ஒன்றிணைய வேண்டிய தருணம் ஏற்பட்டுவிட்டது.

ஆகவே அதற்கான முயற்சிகளை தமதமின்றி எடுக்க வேண்டும். ஜனநாயகத்தினையும் அதிகாரப்பகிர்வினையும் தக்க வைத்துக்கொள்வதாக இருந்தால் ஒன்றிணைவே ஒருவழியாகும் என்றார்.