(செ.தேன்மொழி)

முதலாளிமார் சம்மேளனத்தினால் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்டங்கள் மாத்திரமின்றி அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் சகல தொழிலாளர்களுக்கும் 1000 ரூபாய் நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

குறிப்பாக நிரந்தர தொழிலாளர்களுக்கு மாத்திரமின்றி ஏனைய தொழிலாளர்களுக்கும் 1000 ரூபாய் நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 900 ரூபாய் அடிப்படை சம்பளம் , 100 ரூபாய் வாழ்க்கை செலவு புள்ளிக்கான கொடுப்பனவு என்ற அடிப்படையில் 1000 ரூபாய் நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது. 

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை விதிக்குமாறு கம்பனிகள் நீதிமன்றத்தை நாடியிருந்த போதிலும் , அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையால் வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப செயற்பட வேண்டிய நிர்பந்தம் கம்பனிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விடயங்கள் தொடர்பில் போதிய தெளிவற்றவர்களின் அறிவிப்புக்களால் கம்பனிகள் பயன்பெற்று வருகின்றன. ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளம் என்பது சகல தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்றே வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் சில கம்பனிகள் நிரந்தர தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளத்தையும் ஏனையவர்களுக்கு 700 ரூபாய் நாளாந்த சம்பளத்தையும் வழங்கியுள்ளன. இதேவேளை அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் சில பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு இம்முறையும் 1000 ரூபாய் நாளாந்த சம்பளம் வழங்கப்படாமல் இருக்கின்றது. இந்த நிலைமை  கவலையக்குரியது.

ஆயிரம் ரூபாய் நாளந்த சம்பளத்துடன் தேயிலை மற்றும் இறப்பர் தொழிலாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும். மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாத பட்சத்தில் தொழிலாளர்கள் சட்டபடி வேலை என்ற நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். 

இந்நிலையில் இந்த ஆயிரம் ரூபாய் சம்பளம் தொடர்பில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் கூட முன்னிலையாகாதவர்களே இன்று அது தொடர்பில் பேசிவருகின்றனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வருமானம் மற்றும் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவிபுரியாவிட்டாலும் உபத்திரம் செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். எமது மக்களின்  உரிமைகளை நீதிமன்றத்தினால் மாத்திரம்தான் வென்றெடுக்க முடியும் என்றால் நான் அதற்கும் தயாராகவே உள்ளேன். ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தின் போது நாம் எவ்வாறு நீதிமன்றம் சென்று அதனை வெற்றிக் கொண்டுள்ளோமோ , அதே போன்று ஏனைய விடயங்களையும் நீதிமன்றம் நாடி வெற்றிக் கொள்வோம்.

இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களான பழனி திகாம்பரம் , மனோ கணேசன் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆயியோரிடமும் கலந்துரையாடியுள்ளோம். அதனால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பில் கம்பனிகளை மனிதாபிமான அடிப்படையில் செயற்படுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.