(எம்.மனோசித்ரா)

ஆளுந்தரப்பின் பங்காளி கட்சிகள் ஒன்று கூடி கலந்துரையாடல்களை முன்னெடுப்பது அரசாங்கத்தை மேலும் பலப்படுத்துவதற்கே அன்றி , அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கல்ல. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்திலிருந்து விலகி புதியதொரு கூட்டணியை உருவாக்க நாம் எதிர்பார்க்கவில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன தவிர்ந்த ஆளுந்தரப்பின் ஏனைய பங்காளி கட்சிகள் அடிக்கடி சந்திப்புக்களை முன்னெடுத்துவரும் நிலையில் , இவ்வாறான செயற்பாடுகள் புதிய கூட்டணியொன்றிற்கான வியூயம் என்று கூறப்படுகிறது. 

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து பயணிக்குமா அல்லது தற்போதுள்ள கூட்டணியுடன் இணைந்து பயணிக்குமா என்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. 

எனினும் மாகாணசபைகளுக்கு சுதந்திர கட்சியின் சார்பில் விண்ணப்பங்களை கோரியிருக்கின்றோம். 

இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை கட்சி தலைமையகத்தில் கையளிக்குமாறு அறிவித்துள்ளோம். இதுவரையில் பெருமளவான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஆனால் புதிதாக வேறு எந்தவொரு கூட்டணியை அமைப்பதற்கும் நாம் எதிர்பார்க்கவில்லை. தற்போது நாம் பொதுஜன பெரமுன உள்ளிட்ட மேலும் பல கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டணியுடன் இணைந்தே செயற்படுகின்றோம். 

யாருக்கும் இந்த கூட்டணியை சிதைப்பதற்கான தேவை கிடையாது. எனவே புதிய கூட்டணியொன்றை அமைக்க எதிர்பார்க்கவில்லை.

சில விடயங்கள் தொடர்பில் நிலைப்பாடுகளை தெரிவித்து இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் பல சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. 

இது எமது ஒற்றுமையையே பிரதிபளிக்கிறது. இதனை வேறு கூட்டணி அமைப்பதற்கான முயற்சியாகக் கூற முடியாது. உண்மையில் இது அரசாங்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டமாகும்.

69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு எம்மால் எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலேயே இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. 

இது தவிர வேறு எந்த வகையிலும் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கத்திலோ நாம் ஒன்றிணையவில்லை. அவ்வாறு தெரிவிக்கப்படுகின்றமை முற்றிலும் தவறான கருத்தாகும் என்றார்.