(லியோ நிரோஷ தர்ஷன் )

இலங்கையின் பொப்புக்கூறல் மற்றும் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு 13 ஆவது திருத்தத்தின் ஊடான இராஜதந்திர அழுத்தங்களை சர்வதேச சமூகம் இலங்கை மீது பிரயோகிக்கும் நிலை உருவெடுத்துள்ளது. 

தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும்  அந்த மக்களுக்கான தீர்வுத்திட்டம் போன்றவற்றில் பிரித்தானியா ,கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட  மேற்குலக நாடுகள் பல 13 ஆவது திருத்தத்தை இராஜதந்திர ஆயுதமாக இலங்கை  மீதான வலியுறுத்தல்களுக்கு பயன்படுத்தப்படும் என்பதே  கொழும்பை தளமாகக்கொண்ட  இராஜதந்தரிகளின் கணிப்பாகின்றது.

 எந்தவொரு சமூகமும் ஓரங்கட்டப்படாத  அல்லது எதிராக பாரபட்சம்காட்டப்படாத உறுதியான, இறையாண்மையுடைய, அனைவரையும் உள்வாங்கிய இலங்கையொன்றையே அமெரிக்கா ஆதரிக்கிறது. 

காணாமல்போனோர்விவகாரம்,13ஆவது அரசியலமைப்பு திருத்தம் போன்ற அரசியல் உறுதிமொழிகளைபூர்த்திசெய்தல், மற்றும் காணிகளை முழுமையாக திரும்ப கையளித்தல் போன்ற பலபிரச்சினைகள் இலங்கையின் நீண்ட சிவில் யுத்த காலத்தில் இருந்து இன்னும் தீர்க்கப்படாத விடயங்களாக உள்ளன. இது கவலைக்குரிய விடயம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி.டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

வீரகேசரிக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கும் அவர்,  பயங்கரவாத அமைப்பொன்றுக்கு எதிரான 30 வருட போராட்டமானது அனைவருக்கும் பெருந்துயரங்களை ஏற்படுத்தியது என்பதுடன், தற்போது அந்த வருடங்கள் பற்றிய உண்மைகளை கண்டறிவதற்கும், இடம்பெற்றிருக்கூடிய யாதேனும் தவறுகள் தொடர்பில் செயலாற்றுவதற்கும் , அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்குமான தருணமாகவே இது அமைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு   சூழலில் அமெரிக்க உள்ளிட்ட மேற்குல நாடுகளின் இலங்கை மீதான பார்வையில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் , நல்லிணக்கம் தொடர்பான பாரிய எதிர்பார்ப்புகள் , அரசியலமைப்பில் காணப்படுகின்ற 13 திருத்தத்தின் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் பிரதிப்பலிக்கின்றன. 

13 ஆவது திருத்தம் என்பது மாகாண சபை தேர்தல் மற்றும் மாகாண சபை முறைமையை முன்னெடுத்தல் தொடர்பிலானதாகும்.  எனவே சர்வதேச நாடுகளுடனான இலங்கையின் இணக்கப்போக்குகள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற செய்தியை ஜெனிவா அமர்விற்கு பின்னரான நகர்வுகளில் அமெரிக்க மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் வெளிப்படுத்தியுள்ளன.

ஜெனிவா தீர்மானம் விடயத்தில் இலங்கை கடும் எதிர்ப்பு போக்கை வெளிப்படுத்திய போதிலும் 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதராவாகவும் இலங்கைக்கு எதிராகவும் வாக்களித்தமை மறுக்க முடியாத உண்மையாகின்றது.

எனவே எந்தளவுக்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் இணக்கப்பாட்டு போக்குடன் செயற்படுகிறதோ அந்தளவிற்கு பொருளாதார சுபீட்சத்திற்கு வழிவகுக்கும். மறுபுறம் சர்வதேசத்தின் அங்கீகாரமும் கிடைக்கப்பெறும் என்பதும் இராஜதந்தரிகளின் கணிப்பாகின்றது.