(எம்.எப்.எம்.பஸீர்)

இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெயில் புற்றுநோய் காரணியான 'எப்லொடொக்ஷின்' அடங்கியுள்ளமை தொடர்பிலான சிறப்பு விசாரணைகளுக்கு  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புள டி லிவேரா,  வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக இந்த தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவினால் இக்குழு அமைக்கப்ப்ட்டுள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான இந்த தனிப்படை சிறப்புக் குழுவின் விசாரணை நடவடிக்கைகளில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட 9 அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.

இறக்குமதி செய்யப்படும்  தேங்காய் எண்ணெயில் புற்று நோய் காரணிகள் கலந்துள்ளதாக  பரவலாக கருத்துப் பகிர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், சில பரிசோதனைகளிலும் அவை உறுதி செய்யப்பட்டுள்ளன.  அத்துடன் சி.ஐ.டி.க்கும் சில முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன.

இவ்வாறான நிலையிலேயே, பிரச்சினையின் தீவிரத் தன்மையை அவதானித்து, சட்ட மா அதிபர், குறித்த விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றினை முன்னெடுக்க நேற்று வெள்ளிக்கிழமை சி.ஐ.டி.க்கு ஆலோசனை வழங்கியதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டார்.