(செ.தேன்மொழி)

கணவன் பொல்லால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ள சம்பவமொன்று புத்தளத்தில் பதிவாகியுள்ளது.

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லிபுரம் பகுதியில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லிபுரம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று சனிக்கிழமை பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இது தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதற்கமைய வெட்டாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட முரண்பாட்டில் கோபமடைந்த கணவன் மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் அவரது மனைவியின் சடலத்தை உரைப்பையில் மூடி கட்டிலின் கீழ் மறைத்து வைத்துள்ளதுடன், அன்றைய தினம் இரவு சடலத்தை வேறு பிரதேசத்திற்கு எடுத்து சென்று மறைத்து வைக்கவும் திட்டமிட்டிருந்துள்ளார். 

எனினும் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றதை அடுத்து கட்டிலின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

35 வயதுடைய குறித்த சந்தேகநபரை கைதுசெய்து புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை சடலம் தொடர்பான நீதிவான் பரிசோதனைகளின் பின்னர் மரண பரிசோதனைகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.