பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் தயாராகியிருக்கும் 'தலைவி'  திரைப்படத்தின் வெளியீடு கொரோனாத் தொற்று பரவல் அச்சம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையை தழுவி தயாராகியிருக்கும் திரைப்படம் 'தலைவி'.

பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்க, நடிகர் அரவிந்த்சாமி எம் ஜிஆ ராக நடித்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி 30 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

மேலும் இப்படத்தில் இடம்பெற்ற 'மழை மழை..' என தொடங்கும் பாடல் ஒன்றை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடிகை சமந்தா வெளியிட்டார். இந்த பாடலுக்கும் இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த திரைப்படம் ஏப்ரல் 23ஆம் திகதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு பரவல் காரணமாக தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால், இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.