தமிழகத்தில் கொரோனாத் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று முதல் தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதாக தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்திருக்கிறார்.

இதன்படி திருவிழாக்கள், மதம்சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்களை  வழிபாட்டுத் தலங்களில் அனுமதிக்க வேண்டும்.

பேருந்துகளில் பயணிகள் அமர்ந்து செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பட மாளிகைகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் முச்சக்கர வண்டிகளில் பயணிகள் செல்வதற்கான வரையறைகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களை திறந்திருக்கும் நேரம், அனுமதிக்க வேண்டிய பார்வையாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல்  நடைமுறைக்கு வருகின்றன.

கொரோனா தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்திருக்கிறது.

இதனால் மக்கள் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு வாழ்க்கை முறைக்கு திரும்பி உள்ளனர். முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம், பொது இடங்களில் எச்சில் துப்பினாலும் அபராதம் போன்ற நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக எடுத்து வருகின்றன.

கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் தமிழக அரசின் முயற்சிகள் பலனளிக்காவிட்டால் இரவுநேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தமிழக தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

முகக் கவசம் அணிவது, அடிக்கடி கை கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, தடுப்பூசிகள் செலுத்தி கொள்வதை ஊக்குவிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரமும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100% தடுப்பூசி செலுத்தும் பணியை நிறைவேற்ற இலக்கு நிர்ணயித்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் தடுப்பூசி திருவிழா ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடுமுழுவதும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்கியுள்ளது.

இதனிடையே ஆந்திரம், புதுச்சேரி, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இணைய பதிவு முறை தேவையில்லை என்றும், பிற மாநிலங்கள் மற்றும் ஏனைய வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தமிழகத்திற்குள் நுழைய வேண்டுமென்றால் கட்டாயம் இணைய பதிவு முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.