பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு எதிரான பரிந்துரைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு அண்மையில் முதல் தடவையாகக் கூடியது.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி  சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தலைமையில் இக்குழு கூடியது.

இலங்கையில் உள்ள பெண்களை பெரிதும் பாதித்திருக்கும் நுண்கடன் நிதி நிறுவனங்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இக்குழு கவனம் செலுத்தியது. 

இலங்கையில் நுண்கடன் நிதி நிறுவனங்களை ஒழுங்கு படுத்துவதற்கான அதிகாரசபையொன்று விரைவில் அமைப்பது தொடர்பான யோசனை அமைச்சரவைக்கு விரைவில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த விசேட குழுவின் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கமைய பணியிட வன்முறை உட்பட பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் குறைகளை விசாரிப்பதே இக்குழுவின் முதன்மையான பணியாகும் என்பது இங்கு தீர்மானிக்கப்பட்டது.

பாலின சமத்துவத்தை நோக்கமாக கொண்ட சட்டங்களை ஆராய்ந்து மதிப்பாய்வு செய்வது, பாலின சமத்துவத்தை ஸ்தாபிப்பதற்கான திட்டங்களை வகுத்தல் மற்றும் அவற்றுக்கான நிதி ஒத்துழைப்புக்களை வழங்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அதிகாரிகளையும் இந்தக் குழு ஊக்குவிக்கும்.

தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் முடிவெடுக்கும் அமைப்புகளிலும், அரச, சிவில் சமூகம் மற்றும் தனியார் துறையிலும் அதிக பெண்கள் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிப்பதிலும் இந்தக் குழு பங்களிக்கவுள்ளது. 

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி கவிரத்ன, கலாநிதி ஹரினி அமரசூரிய, எம்.உதயகுமார், எஸ்.சிறிதரன், ரோஹன பண்டார மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளரும், பணியாட்தொகுதி பிரதானியுமான குஷானி ரோஹனதீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.