(செ.தேன்மொழி)

வாகன விபத்துகளினால் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

பண்டிகை காலத்திற்கு இன்னமும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் வாகன விபத்துகள் மீண்டும் அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இந்நிலையில் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் வாகன விபத்துகளில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களுள் 7 பேர் நேற்று இடம்பெற்ற விபத்துகளில் உயிரிழந்துள்ளதுடன் , எஞ்சிய ஆறு பேரும் இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துகளில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்தவர்களாவர்.

இதன்போது , 6 பாதசாரதிகளும் , 4 மோட்டார் சைக்கிள் பயணிகளும் , 2 சாரதிகளும் மற்றும் பயணி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த காலப்பகுதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் அனைவரும் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.

வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் வீதிகளை பயன்படுத்தும் போது வீதி சட்டவிதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

இந்நிலையில் விபத்துகளை தடுப்பதற்காக பொலிஸார் பல்வேறு சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கமைய பொது பொக்குவாரத்து நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பில் இன்று முதல் சிவில் உடையில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். இதற்கு வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.