(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நிதி அமைச்சின்  சட்டமூலத்தை வெளிவிவகார அமைச்சரும் சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன பாராளுமன்றில் சமர்ப்பித்தார்.

இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல, "போர்ட் சிட்டி" என்பது வேறொரு நாடாகும், எனவே இந்த சட்டமூலத்தின் மீது விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நிதி அமைச்சின்  சட்டமூலத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன முன்வைத்தார். 

கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவானது, விசேட பொருளாதார வலயமொன்றை ஸ்தாபிப்பதற்கும், பதிவுசெய்தல், உரிமங்கள், அதிகாரவளிப்புக்கள் மற்றும் வேறு அங்கீகாரங்களை அளிப்பதற்கும் செயற்பாடு செய்யும் பொருளாதார வலயத்திலிருந்து வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கும் கொண்டு நடாத்துவதற்கும் வியாபாரங்களை மேம்பாடுகளை ஊக்குவிப்பது ஆணைக்குழுவின் கீழ் இடம்பெறும்.

சர்வதேச வர்த்தகம், கப்பற்றொழில் முகாமைத்துவ தொழிற்பாடுகள், கரைகடந்த வங்கித் தொழில், நிதிசார் சேவைகள், தகவல் தொழில்நுட்பம், வியாபார வழிமுறைகள், வெளியாட்களை பணிக்கு அமர்த்தல், கூட்டிணைக்கப்பட்ட தலைமையகங்களின் தொழில்பாடுகள், பிராந்திய விநியோக தொழிற்பாடுகள், சுற்றுலாப் பயணத்துறை மற்றும் வேறு துணை சேவைகளை மேம்படுத்துவது ஆணைக்குழுவின் நோக்கமாக அமையும்.

மேலும் சர்வதேச பிணக்குத் தீர்வு நிலையமொன்றை தாபிப்பதற்கும் நகர வசதி தொழிற்பாடுகள் மற்றும் பொருளாதார வலயத்தினுல் வதிவிட சமூகமொன்றின் குடியேற்றங்களை மேம்படுத்துவதற்கும் ஏனைய கருமங்களை ஏற்பாடு செய்வதும் சட்டமூலத்தின் மூலம் உருவாக்கப்படும் ஆணைக்குழுவின் பணியாகவுள்ளது.

இச்சட்டத்தையே  நேற்று பாராளுமன்றில் முதலாம் வாசிப்புக்காக விடப்பட்டதுடன், இன்று வெள்ளிக்கிழமை இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சபை முதல்வர் அறிவித்தார்.

எனினும் இந்த சட்டமூலத்தை எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல போர்ட் சிட்டி என்பது தனியான ஒரு நாடாகும். ஒரு நாட்டில் இரண்டு சட்டங்களை உருவாக்குகின்றனர் எனவே இச்சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றார்.