(நா.தனுஜா)

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்குக் கட்டளை வழங்கியவர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதைப் புறந்தள்ளி, இவ்விடயம் தொடர்பில் மக்கள் கொண்டிருக்கும் அக்கறையைத் திசைதிருப்புவதற்கான நடவடிக்கைகளே தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார்? அதற்கான கட்டளைகள் யாரால் வழங்கப்பட்டன? இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யார்? ஆகிய கேள்விகளுக்கான பதில்களையே பொதுமக்கள் எதிர்பார்த்தார்கள். எனினும் அந்த எதிர்பார்ப்பு இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை.

இந்நிலையில் நௌபர் மௌலவியே உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என்ற கருத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்டுள்ளார். எனினும் இதிலிருந்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக இதனை வேறுபக்கம் திசைதிருப்புவதற்கு முயற்சிப்பது தெளிவாகின்றது.

ஆகவே இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் யார் தொடர்புபட்டிருக்கிறார்கள் என்பதை மாத்திரமன்றி, யார் கட்டளைகளை வழங்கினார்கள் என்பதும் கண்டறியப்பட வேண்டும். எனினும் இதுபற்றி தெளிவுடன் அரசாங்கம் செயற்படவில்லை. உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதைப் புறந்தள்ளி, இவ்விடயம் தொடர்பில் மக்கள் கொண்டிருக்கும் அக்கறையைத் திசைதிருப்புவதற்கான நடவடிக்கைகளே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே இதுவிடயத்தில் உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலேயே செயற்பட வேண்டும். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நிலவும் மந்தகரமான நிலையே பல்வேறு நெருக்கடிகளைத் தோற்றுவிக்கின்றது என்று குறிப்பிட்டார்.