தமிழகத்தில் 16-வது சட்டமன்ற பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. 

மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தனர். மொத்தம் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

பதிவான மொத்த வாக்கு சதவீதத்தை வைத்து பார்க்கும்போது, 4 கோடியே 57 இலட்சம் பேர் மட்டுமே வாக்களித்து இருக்கின்றனர். ஒரு கோடியே 71 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை. கொரோனா பரவல் அச்சம், வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

வாக்குப்பதிவு சதவீதத்தில் கடைசிநிலையில் உள்ள சென்னை மாவட்டத்தில் பெரும்பாலானோர், கொரோனா காலத்தில் வேலை இழந்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்யும் பலர் சொந்த ஊரில் வீட்டில் இருந்துகொண்டே  வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு சென்னையில்தான் வாக்கு இருக்கிறது என்றாலும், வாக்களிக்க செல்ல வேண்டுமா என்ற யோசனையில் வாக்குச்சாவடிக்கு வரவில்லை. இவைதான் வாக்குப்பதிவு குறைந்ததற்கு காரணமாக கருதப்படுகின்றன.

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 74.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாகவும், இம்முறை 1.48 சதவீத வாக்குகள் குறைவாகவே பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.