2022 பீஜங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்க வேண்டாம் என்று சீன அரசாங்கம் புதன்கிழமை வொஷிங்டனை வலியுறுத்தியுள்ளது.

சீனாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு ஒரு கூட்டு நடவடிக்கையாக பீஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிப்பது குறித்து நட்பு நாடுகளுடன் பேசுவதாக ஜோ பைடன் நிர்வாகம் கூறியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளிகாயுள்ளது.

சின்ஜியாங் பிராந்தியத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான முறைகேடு குற்றச்சாட்டுகளை சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் நிராகரித்ததுடன், வொஷிங்டனின் 2022 ஒலிம்பிக் புறக்கணிப்புக்கு எதிராகவும் எச்சரிக்கை விடுத்தார்.

"விளையாட்டை அரசியல்மயமாக்குவது ஒலிம்பிக் சாசனத்தின் அனைத்து நாடுகளின் விளையாட்டு வீரர்களின் நலன்களை பாதிக்கும் என்பதுடன் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி உள்ளிட்ட சர்வதேச சமூகம் அதை ஏற்றுக்கொள்ளாது" என்று அவர் கூறினார்.

 2022 பெப்ரவரியில் பீஜிங்கில் ஆரம்பமாகவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை மனித உரிமைகள் குழுக்கள் எதிர்க்கின்றன. 

உய்குர் மக்கள், திபெத்தியர்கள் மற்றும் ஹாங்காங்கில் வசிப்பவர்கள் ஆகியோருக்கு எதிரான சீன துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு கவனம் செலுத்த ஒலிம்பிக்கை புறக்கணிப்பு அல்லது பிற நடவடிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.