ஏப்ரல் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டவரா ? - கிரியெல்ல சந்தேகம்

Published By: Gayathri

08 Apr, 2021 | 12:04 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்துக்கு பிரயோகித்து வந்த அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கே ஏப்ரல் தாக்குதல் சூத்திரதாரியாக நெளபர் மெளலவி பெயரிடப்பட்டிருக்கின்றார். 

அவர்தான் சூத்திரதாரி என்றால் ஏன் அவரை ஆணைக்குழு விசாரணைக்கு அழைக்கவில்லை என கேட்கின்றேன். 

அதனால் பிரதான சூத்திரதாரியை கைதுசெய்யும்வரை நாடு அச்சுறுத்தலிலேயே இருக்கின்றது என எதிரக்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான நான்காவது நாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஏப்ரல் தாக்குதலுக்கு சர்வதேச சதித்திட்டம் இருப்பதாகவும் இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஒருவர் இருக்கவேண்டும் என பலராலும் தெரிவிக்கப்பட்டுவந்தது. 

ஆனால், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பிரதான சூத்திரதாரி தொடர்பான எந்த தகவலும் வெளிப்படவில்லை. அதற்கான சாட்சிகள் முன்வந்தும் இல்லை. தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பாக சில பரிந்துரைகளை ஆணைக்குழு செய்திருக்கின்றது.

ஆனால், தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் ஆகின்ற நிலையில் திடீரென இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஒருவர் வெளிப்பட்டிருக்கின்றார். 

சூத்திரதாரி தொடர்பாக சாட்சியங்கள் இருந்திருந்தால் ஏன் அதனை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவில்லை என கேட்கின்றேன். 

பிரதான சூத்திரதாரி என பெயரிடப்பட்டிருக்கும் நெளபர் மெளலவி, சம்பவம் இடம்பெற்ற ஏப்ரல் 24ஆம் திகதியே கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். ஒன்றரை வருடங்களுக்கும் அதிக காலம்  ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டிருந்தது. அந்த விசாரணை ஆணைக்குழுவுக்கு சாட்சியம் வழங்க நெளபர் மெளலவியை அழைத்திருக்கவில்லை. 

அதனால் நெளபர் மெளலவி என்பவர் சூத்திரதாரியாக உருவாக்கப்பட்டவரா? என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

ஏனெனில், இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார்? என்பதை வெளிப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை கர்தினால் மெல்கம் ரன்ஜித் உட்பட சுயாதீன அமைப்புகள் பல தொடர்ந்து தெரிவித்து வந்தன. 

இந்த அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்காக இவ்வாறு சூத்திரதாரி என ஒருவர் பெயரிடப்பட்டிருக்கின்றார் என்ற சந்தேகம் எழுகின்றது.

அத்துடன் சஹ்ரானுக்கு 2009இல் சம்பளம் வழங்கியிருக்கின்றது. அதுதொடர்பான சாட்சியங்களும் ஆணைக்குழுவின் அறிக்கையில் இல்லை. 

அது சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் அதனை அடிப்படையாக்கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு பலரை கைதுசெய்திருக்க முடிந்திருக்கும். 

அதேபோன்று சாரா புலனாய் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவுக்கு தப்பிச்சென்றமை தொடர்பில் தெளிவான சாட்சி இருக்கின்றது. ஆனால் சாராவை அரசாங்கம் இதுவரை கேட்கவில்லை.

மேலும் சஹ்ரானை பின்தொடர்ந்து சென்றவர்தான் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்கசில்வா. 

திடீரென நாமல் குமார என்ற ஒருவர் முன்வந்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வை கொலை செய்ய சதித்திட்டம் இருப்பதாக தெரிவித்து, அதற்கு பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்கசில்வா சம்பந்தம் என தெரிவித்ததுடன் அவரை இடை நிறுத்தினார்கள். 

அதனால் சஹ்ரான் தொடர்பான விசாரணை நிறுத்தப்பட்டது. இதுதொடர்பான எந்த சாட்சியங்களும் அறிக்கையில் இல்லை.

அத்துடன் இந்த சம்பவத்துக்கும் எமது புலனாய்வு துறைக்கும் சம்பந்தம் இருப்பதென்ற சந்தேகம் நாட்டுகுள் இருக்கின்றது. 

ஏனெனில், குண்டு வெடித்து 24மணி நேரம் செல்வதற்கு முன்னர் அனைவரையும் கைதுசெய்தார்கள். இவ்வாறானவர்கள் தாக்குதலுக்கு பின்னால் இருந்திருக்கின்றார்கள் என்பதை புலனாய்வுத்துறை அறிந்திருக்கின்றனர்.

புலனாய்வு அதிகாரி ஒருவர் குண்டுதாரி ஒருவை சந்தித்ததாக சாட்சியம் ஒன்றும் இருக்கின்றது. எனவே, இந்த சம்பவத்தை மேற்கொண்வர்கள் இன்னும் சுதந்திரமாக இருப்பவர்களானால் அது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாகும். அதனால் உண்மையான சூத்திரதாரியை கைதுசெய்யும்வரை நாடு அச்சுறுத்தலிலேயே இருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right